இந்தியாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன.
இந்தியாவில் தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக அதனை போட்டு வருகின்றனர். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இடையில் சில மாதங்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்தியா கொஞ்சம் தடுமாறியது. தற்போது தடுப்பூசி போடும் பணி மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்தார். ஜனவரி மாதத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் செலுத்தப்பட்ட அதிகபட்ச தடுப்பூசி எண்ணிக்கை இதுவாகும்.
இதனை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில், "இன்றைய தடுப்பூசி எண்ணிக்கையை பாருங்கள். 1 கோடியை தாண்டுவது ஒரு முக்கியமான சாதனை. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், தடுப்பூசி போடும் பணியை வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்