இனி வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் 9ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 8 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.
தமிழகத்தில் இதுவரை 73 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 35 சதவீதத்தினர் 2ஆம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் விரைவாக அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்துவதற்காக இனி வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதன்படி, 9ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. 50 ஆயிரம் முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 2 ஆயிரம் முகாம்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசிகள் போடப்படுகிறது.