free website hit counter

நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் "சிவசக்தி" என்ற பெயரில் அழைக்கப்படும் - பிரதமர் மோடி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை இஸ்ரோ சென்றிருந்தார்.
சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்தார். இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர், இஸ்ரோ தலைவர் படம்பிடிக்கப்பட்ட நிலவின் போட்டோக்களை வழங்கினார்.

பின்னர் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் பதித்தது குறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமாக பிரதமர் மோடிக்கு எடுத்துக் கூறினார்.
அதன்பின் பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்கள் மத்தியில் இன்று இருப்பதன் மூலம் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது. நான் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றபோது என் மனம் முழுவதுமாக உங்களுடனே இருந்தது. நான் இந்தியாவுக்கு வந்த உடனே உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என நான் நினைத்தேன்.

உங்கள் அனைவருக்கும் நான் சல்யூட் செய்ய நினைத்தேன். நீங்கள் தேசத்தை எந்த அளவுக்கு உயரத்துக்கு அழைத்துச்சென்றுள்ளீர்கள் என்றால், இது சாதாரணமானது அல்ல. இந்தியா நிலவில் கால் வைத்துள்ளது. நம் நாட்டின் கவுரவத்தை நிலவில் நாம் நிலைநாட்டியுள்ளோம். விண்வெளி துறையின் சாதனைகள், பங்களிப்பு இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது.

நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் "சிவசக்தி" என்ற பெயரில் அழைக்கப்படும். இமயம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்களை இணைக்கின்ற பெயராக இது இருக்கும். இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியும் கூட. சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது, எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சாட்சி.

அதேபோல 2019-ல் சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தை பதித்த இடம் திரங்கா(மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டவே திரங்கா என பெயர் சூட்டப்படுகிறது.

சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும். ஆகஸ்ட் 23ந்தேதி விஞ்ஞானம், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula