free website hit counter

ராகுல் காந்தி கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்து, தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

”சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தில்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.

மேலும், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது.

ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula