தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து பரந்தூர் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்து பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தன.
விமான நிலையம் திட்டம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பரந்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஏகனாபுரம் கிராம மக்கள் கிட்டத்தட்ட 1200 நாள்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு தங்களின் எதிர்ப்பிணை தெரிவித்து வந்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி துவக்கிய பிறகு முதல் களப்பணியாக ஏகநாதபுரம் போராட்ட களத்திற்கு சென்ற விஜய், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், கடந்த வாரம் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்துக்கு இன்று வந்த பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர், முதல்வர் விஜய்க்கு பச்சை துண்டு அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
