2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில் தேசிய அரசியல் களம் அனல் பரப்பி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு 2014 தேர்தலின் போது சரிவைச் சந்தித்தது. அதிலிருந்து மெல்ல மீண்டு வரும்போதும் பாஜகவுக்கு எதிராக தனித்து களமாடும் நிலை இப்போது உருவாகிவிடவில்லை. அதேசமயம் மூன்றாவது அணி ஒன்று உருவாகினால் அது பாஜகவுக்கு பலனளிக்கும் விதமாக அமைந்துவிடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 2019 தேர்தலின் போது காங்கிரஸ் அணியுடன் சில பிராந்திய கட்சிகள் இணைய மறுத்தன. அது பாஜகவுக்கு சாதமாகவே அமைந்தது.
இதனால் இப்போதிருந்தே பிராந்திய கட்சிகளை தங்கள் அணிக்கு கொண்டு வரும் பணியை காங்கிரஸ் செய்து வருகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸ் உடன் 14 எதிர்கட்சிகள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்தன.
எனவே இந்த கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான அணியை அமைக்க காங்கிரஸ் முயல்கிறது. அதன் ஒரு அங்கமாக இன்று காணொளி காட்சி மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூலம் 14 கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள், எடுக்கப்படும் முடிவுகள் என்ன என்பது குறித்து தேசிய அரசியலில் பல்வேறு விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.