இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பாவனையுள்ளன. இவையிரண்டும் இரு தடவைகள் போட வேண்டிய தடுப்பூசிகளாகும். கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் இன்று அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வெளியிட்ட அறிக்கையில், இரு மருந்துகளை கலந்து பாவிப்பது நல்ல பயன் தரும் எனத் தெரிவித்ததை அடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆனையம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளிலும் முதல் தவணையில் ஒரு தடுப்பூசியையும், 2வது தவணையில் மற்றொரு தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள முடியும். இது தொடர்பான ஆய்வுகள் வெளிநாடுகளில் நடந்து வரும் நிலையில் இந்தியா இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது, குறிப்பாக செலுத்துகிறபோது அது பாதுகாப்பானது மட்டுமல்ல, கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான பலனை, அதாவது நோய் எதிர்ப்பு சக்தியைத்தருகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அறிய வருகிறது.