இந்தியாவின் முக்கிய நபர்கள் பலரது தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதான விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகிறது.
300க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 2 மந்திரிகள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், ஒரு நீதிபதி, 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது உரையாடல்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதான விவகாரம் பெருஞ் சர்ச்சையாக மாறிவருகிறது. இந்நிலையில் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முன் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பெகாசஸ் உளவு விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலிறுத்தியுள்ளார். மேலும் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிடவும், இந்த உளவு விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.