தென்னாப்பிரிக்க கலவரத்தில் அங்கு வாழும் இந்தியர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் தமிழர்கள் உள்பட இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நிலவி வரும் கலவரத்தால் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் பெரும் பாதிப்படைந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியர்களின் வணிக நிறுவனங்கள் சொத்துக்களை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார் அதில் :
தென்னாப்பிரிக்காவில் நிலவும் கலவரத்தால் அங்கு வாழும் பெரும்பான்மையான தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பாதிப்புக்குள்ளாகி கவலைக் குரல் எழுப்பிவருகிறார்கள். அவர்கள் பொருளாதார இழப்பால் தவித்துவருவதுடன் மேலும் அங்கு பதற்றம் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் அவர்களிடம் நிலவிவருகிறது. இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இந்த விவகாரத்தை, தூதரகம் மூலமாக தென்னாப்பிரிக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அங்கு அமைதியும், நல்லிணக்கமும் விரைவில் நிலவுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தென்னாப்பிரிக்காவில் வசித்து வரும் தமிழர்கள் உள்பட இந்தியர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு தேவையான கூடுதல் நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.