சுவிற்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 129 பேர் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுவிஸ் மத்திய சுகாதார அலுவலகத்தின் (FOPH) தரவுகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் FOPH செய்தித் தொடர்பாளர் கிராகோயர் கோக்னியாட் கூறுகையில் " இது ஆச்சரியமானதல்ல. தடுப்பூசிகளின் செயல்திறன் விகிதம் மிக அதிகமாக இருந்தாலும், அவை 100 வீத செயல்திறன் கொண்டவை அல்ல. ஃபைசர் / பயோஎன்டெக்கிற்கு 95 சதவிகிதம் மற்றும் மாடர்னாவுக்கு 94 சதவிகிதம் என்ற வகையிலேயே அதன் திறன் வீதம் கணிக்கப்பட்டிருக்கிறது.
சுவிற்சர்லாந்தில் இதுவரை கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள். இவர்களில், 129 பேர் மீண்டும் தொற்றுக்குள்ளானது என்பது ஆச்சரியந் தரக்கூடியதல்ல. மேலும், தடுப்பூசியின் செயல்திறன் வயதானவர்களில் குறைவாக இருக்கலாம். எவ்வாறாயினும் இரண்டு தடுப்பூசிகளும் "மாறுபாடுகளுக்கு எதிராகவும், குறிப்பாக இந்திய மாறுபாடுகளுக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும் என கோக்னியாட் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி இட்டவர்கள் இது குறித்து அச்சம் கொள்வதைத் தவிர்த்து, வயதானவர்களும், நோய் குறைபாடுள்ளவர்களும், போதிய அவதானத்துடன் நடந்து கொள்வது அவசியமாகும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.