இத்தாலியின் பிரதம மந்திரி மரியோ ட்ராகி இன்று திங்கட்கிழமை பிற்பகலில் இத்தாலிய சுகாதார வல்லுநர்கள், மற்றும் அரசாங்க அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த உரையாடலின் முக்கிய நோக்கம், தற்போது நடைமுறையிலிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை குறைப்பது தொடர்பில் ஜூன் மாதத்தில் கோவிட் -19 கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவற்றை நீக்க முடியுமா? என்பதை ஆராய்வதாகும்.
வைரஸை பரப்பக்கூடிய சமூகமயமாக்கலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரவு 10 மணி ஊரடங்கு உத்தரவு, இத்தாலியில் மிகவும் பரபரப்பாகக் குறிப்பிடப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாகும். பல வாரங்களாக அமைச்சர்களும், பல அரசியற்கட்சிகளும் இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றன. இன்றைய உரையாடலில் ஊரடங்கு உத்தரவு இரவு 11 மணிக்கு அல்லது நள்ளிரவுக்கு பின்னுக்குத் தள்ளப்பட வேண்டுமா அல்லது முற்றிலுமாக அகற்றப்பட வேண்டுமா என்பது முக்கிய விவாதமாக இருந்திருக்கிறது.
அதேபோல் ஜிம்கள் மற்றும் உட்புற நீச்சல் குளங்களை மீண்டும் திறப்பதற்கான புதிய திகதிகள் மற்றும் இந்த கோடையில் திருமண வரவேற்புகளை நடத்துவதற்கு அனுமதித்தல் என்பதையும், அரசாங்கம் கவனிப்படுத்தியதாக கருதப்படுகிறது.
இன்றைய கூட்டத்தின் திட்டங்கள் திங்கள்கிழமை இன்று மாலை அமைச்சர்கள் சபைக்கு ஒப்புதலுக்காக செல்லும். ஒப்புதல் கிடைக்கும் விதி மாற்றங்கள் அடுத்த வாரம் ( மே 24 திங்கள்) முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தாலியின் சுகாதார கண்காணிப்புக் குழு அதன் அடுத்த வார அறிக்கையை வெளியிடும் நாளான மே 21 வெள்ளிக்கிழமைக்குள் விதிகளை மேலும் தளர்த்துவதற்கான ஆணையை உறுதிப்படுத்த வேண்டும். என இத்தாலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.