சுவிற்சர்லாந்தில் கோவிட் வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை மறுபடியும் 10,000 ஐ தாண்டியுள்ளது. தினசரி தொற்றுக்களின் மதீப்பீட்டு வகையில், நேற்று புதன்கிழமை 10,466 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், இரண்டாவது அலை தாக்கத்தின் கண்டிருந்த எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.
தொற்றுக்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்வது மட்டுமல்லாமல், சுவிற்சர்லாந்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியிலிருந்து மேற்கு நோக்கி தொற்றுநோய் வேகமாகப் பரவி வருவதாகவும், சூரிச் நகரில் உள்ள மருத்துவ மனைகளில் 'இனி ஐசியூ படுக்கைகள் இல்லை' எனும் நிலை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கூட்டாட்சி அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நேற்றைய புள்ளி விபரங்களின்படி, 10,466 கோவிட் புதிய தொற்றுக்களும், 22 கோவிட் இறப்புகள் மற்றும் 140 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிச்சில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 177 பேர் கோவிட் சிகிச்சையில் உள்ளதாகவும், அவர்களில் 43 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், அவர்களில் 24 பேர் வென்டிலேட்டரின் உதவியுடன் உள்ளதாகவும், இது கடந்த மாதத்தில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதைச் சுட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சுவிற்சர்லாந்தின் தலைநகரான பெர்னில் உள்ள மருத்துவமனைகளும், வரும் நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழியும் என்று எச்சரித்துள்ளதால், "சிவப்பு குறியீடு" வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய கூட்டாட்சி அலுவலகத்தின் சுகாதார அலுவலகம் வெளியிட்டுள்ள முதல் வரைபடம், நவம்பர் 22 அன்று இருந்த தொற்றுநோயியல் நிலைமையைக் காட்டுகிறது. இரண்டாவது படம் நேற்று புதன்கிழமைச் சூழ்நிலையை சித்தரிக்கிறது. இவற்றின் மூலம் தற்போதைய தொற்றியல் நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும்.