இத்தாலியிலுள்ள அனைத்து பிராந்தியங்களும் தன்னாட்சி மாகாணங்களும், வரும் திங்கட் கிழமை முதல் குறைந்த ஆபத்துள்ள 'மஞ்சள்' மண்டலப் பகுதிகளாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருவதால், சுகாதார அமைச்சகம் மற்றும் உயர் சுகாதார நிறுவனம் (ஐ.எஸ்.எஸ்) நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட சமீபத்திய வாராந்திர சுகாதார கண்காணிப்பு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளன.
இத்தாலியின் தேசிய சராசரி Rt இனப்பெருக்கம் எண் மற்றும் நிகழ்வு விகிதம் இரண்டும் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன."இன்றைய கண்காணிப்பு அறிக்கை மற்றும் அதன் விளைவாக வரும் கட்டளைகளுடன், இத்தாலி அனைத்தும் திங்கட்கிழமை முதல்மஞ்சள் மண்டலத்தில் இருக்கும்" என்று சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா தனது சமூக வலைத்தளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எழுதியுள்ளார். இதேவேளை இத்தாலியின் ஆறு பிராந்தியங்கள் ஜூன் தொடக்கத்தில் இருந்து குறைந்த கட்டுப்பாட்டுடைய ‘வெள்ளை’ மண்டலங்களாக இருக்கும் எனவும் தெரிய வருகிறது.
பிரதம மந்திரி அலுவலகம், வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் மீதமுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான சில விவரங்களை இறுதி செய்வதற்கு முன்னர், ஆரம்ப தளர்த்தல் நடவடிக்கைகள் எண்களை பாதித்திருக்கிறதா எனும் சுகாதார அமைச்சகத்தின் இந்த வார அறிக்கை காத்திருப்பதாக கூறியிருந்தது. சுகாதார அமைச்சகத்தின் நேற்றைய இந்த அறிவிப்புக்கள், இத்தாலியில் மேலும் சில மறு திறப்புகளை முன்னோக்கி நகர்த்த உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.