ஞாயிற்றுக்கிழமை வடக்கு இத்தாலியின் பீடுமோண்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா என்ற கிராமத்திலுள்ள மேகியோர் என்ற ஏரியின் குறுக்கே மோட்டரோன் மலைக் குன்றுக்கு செல்ல அமைந்திருக்கும் கேபிள் காரில் கட்டமைப்பில் 985 அடி உயரத்தில் ஒரு கேபிள் கார் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்ட நிலையில் 9 வயது சிறுவன் ஒருவன் உட்பட கிட்டத்தட்ட 14 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. கோவிட்-19 பெரும் தொற்றால் மூடப் பட்டிருந்த நிலையில், ஏப்பிரல் 24 ஆம் திகதி தான் மீண்டும் இந்த கேபிள் கார் சேவை இயங்கத் தொடங்கியது. இந்நிலையில் இப்போது ஏற்பட்டிருக்கும் இவ்விபத்து காரணமாக இத்தாலி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மே 16 ஆம் திகதி இத்தாலி சுற்றுலாப் பயணிகளுக்குமான தடையை நீக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரின் தகவல் படி பலியானவர்களில் இத்தாலியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 இஸ்ரேலியர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கேபிள் கார் விபத்தில் பலியானவர்கள் பலரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர்கள் உயரத்தில் இந்த கேபிள் கார் சென்ற போது அதனை இணைக்கும் கேபிள் உடனடியாக அறுந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இத்தாலியின் அதிபர் சேர்கியோ மட்டரெல்லா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். 2001 ஆமாண்டு இதே கேபிள் கார் ஓரிடத்தில் மாட்டிக் கொண்டதில் சுமார் 40 சுற்றுலாப் பயணிகள் மீட்கப் பட வேண்டிய தேவை ஏற்பட்டது. 1970 ஆமாண்டு நிறுவப் பட்ட இந்த கேபிள் கார் சேவை 2014 ஆமாண்டு புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டு பின்பு 2016 இல் மீண்டும் திறக்கப் பட்டது.
ஒரு கேபினில் 40 பேர் வரை செல்லலாம் என்ற போதும் கோவிட்-19 பெரும் தொற்றால் இந்த எண்ணிக்கை பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது.