சுவிற்சர்லாந்தில் ஏப்ரல் 1ம் திகதி முதல் கோவிட் - 19 பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தவிக்கபடுவதனால் நாடு முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 16 ந் திகதி மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகு மத்திய கூட்டாட்சி அரசு இதனை முடிவு செய்தது. எனவே நடைமுறையில் உள்ள கடைசி நடவடிக்கைகளும் ஏப்ரல் 1ல் விலக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பொது போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகளில் முகமூடியை அணிய வேண்டிய தேவை, தனிமைப்படுத்தல் கடமை என்பன நீக்கப்படும். கோவிட் -19 பெருந்தொற்றுக்காக அமைக்கப்பெற்ற தேசிய அறிவியல் பணிக்குழுவும் கலைக்கப்படும்.
இந்த விதிமுறைகள் விலக்கப்படுகையில், கோவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்யும் நபர்கள் சுதந்திரமாக சுற்றி வர முடியும். நோயின் விளைவுகள் லேசானவை என்றாலும், வைரஸை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆதலால் அறிகுறிகள் இருந்தால், முகமூடியை அணிந்துகொள்வது நல்லது, பரிசோதனை செய்து, முடிவு நேர்மறையாக இருந்தால், வீட்டிலேயே இருப்பது நல்லது என மாநிலங்களின் சுகாதார இயக்குநர்கள் மாநாட்டின் பொதுச் செயலாளர் மைக்கேல் ஜோர்டி தெரிவித்துள்ளார்.
மாநில மருத்துவர்களின் தேசிய சங்கத்தின் தலைவரான ருடால்ஃப் ஹவுரி, "தொற்றுநோயியல் நிலைமை மோசமடைந்து வருவதால் எச்சரிக்கையுடன் இருப்பதும், வெப்பநிலைகள் நன்கு மாறும் வரை காத்திருப்பது நிச்சயமாக ஒரு தவறல்ல" என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை ஏப்ரல் 1ந்திகதி முதல் SwissCovid செயலின் பயன்பாடு செயலிழக்கப்படும். இதனால்
ஏப்ரல் 1 ம் திகதிக்குப் பிறகு, ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் இருந்து ஸ்விஸ்கோவிட் மறைந்துவிடும் என்று மத்திய பொது சுகாதார அலுவலகம் (FOPH) தெரிவித்துள்ளது.
2022/2023 குளிர்காலத்தில் தொற்றுநோயியல் நிலைமை எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்து, SwissCovid செயலியின் செயல்பாட்டை விரைவாகத் தொடங்கலாம். எனவே, தேவையான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் தொடர்ந்து பராமரிக்கப்படும், என FOPH செய்தித் தொடர்பாளர் கேத்ரின் ஹோலென்ஸ்டீன் கூறினார். நோய்த்தொற்றுச் சங்கிலிகளைக் கண்காணிக்க இந்த ஆப் ஜூன் 2020 இல் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.