அன்மையில் வெளிவந்த pan-Indian சினிமாவான RRR குறித்து Sundar Shalinivas தனது பேஸ்புக் சமூகவலைத் தளத்தளத்தில் சிறப்பான ஒரு பார்வையினை எழுதியுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் இங்கே அதனை மீள்பதிவு செய்கின்றோம். -4Tamilmedia Team
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் கடல் என்று ஒரு படம் பார்த்து விட்டு வெளியே வந்த போது படம் எப்படி இருக்கு என்று நண்பன் கேட்டான். 'ராவணன் நல்லா இருக்கு' என்று நான் சொன்னேன். அதே போல நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் 'காற்று வெளியிடை' எப்படி இருக்கு என்று அவன் கேட்டான். நான் 'கடல் நல்லா இருக்கு' என்று சொன்னேன்.அப்போது தான் புரிந்தது: மணிரத்னம் எப்பேர்பட்ட ஒரு மாஸ்டர் என்று? ஒவ்வொரு படத்திலும் மிகக் கடுமையாக உழைக்கிறார், தன் முந்தைய படமே பரவாயில்லை என்று தோன்ற வைக்க.
மணி சார் தனது பழைய படங்களுக்காக தான் இப்படி உழைக்கிறார் என்றால், ராஜமவுலியோ ஷங்கர் படங்களுக்காக அரும்பாடுபட்டு உழைக்கிறார். ஆர் ஆர் ஆர் என்ற படம் பார்த்த போது அது தான் தோன்றியது—ஷங்கர் எடுத்த ஐ, 2.0 போன்ற குப்பைகளே கொஞ்சம் பெட்டெர் குப்பைகளோ—என்று. (கொஞ்சம் தான்).
இந்த படத்தை pan-Indian படம் என்கிறார்கள். இந்த நிலப் பரப்பின் எந்த பகுதி மக்கள் இதைத் தங்கள் படமாக உணர்வார்கள் என்று சத்தியமாக தெரியவில்லை.
தெலுகு நடிகர்கள் நடித்ததாலும், வானத்தில் நடப்பதாலும், தரையில் பறப்பதாலும், காது ஜவ்வு கொஞ்சம் பதம் பார்க்கப் படுவதாலும் - இவற்றால் வேண்டுமென்றால் ஆந்திர தேசம் இதைத் தங்கள் படமாக உணரலாம்.
நான் பார்த்தது தமிழ் (என்று சொல்லப்பட்ட) வர்ஷன். ஆனால் அது தமிழ் தானா, இல்லை, சிங்களம் உருவாவதற்கு முன்னால் இருந்த 'தமிழும் பாளியும் கலந்த வடிவமா' என்று தெரியவில்லை. NTR-க்கு dubbing கொடுத்தது அநேகமாக PTR என்று நினைக்கிறேன். Nativity, landscape, culture என எதுவுமே ஒட்டவில்லை. பாகுபலியில் 'இடம்' மற்றும் 'காலம்' பற்றிய எந்த குறிப்பும் இருக்காது என்பதால் அது ஒரு முற்றிலுமான parallel universe புனைவு என்று ஏற்றுக் கொண்டு படத்தில் ஒன்ற முடிந்தது.
ஆனால் இது—இதோ 100 ஆண்டுகளுக்குள் நடந்த ஒரு கதை. ஆனால் கலை அலங்காரம், உடை, இசை என எல்லாமே அத்தனை நவீனம், அத்தனை அன்னியம்.
அது மட்டுமா? இது மனிதர்கள் பற்றிய கதை தானா? இல்லை ஏதேனும் விஷ ஜந்து கடித்து superpower பெற்ற மனிதர்களா இவர்கள்?
விஜய்யே நடித்தாலும் அந்த ஒரு கட்டிடத் தாவல் காட்சிக்காக குருவி எப்படி கேலி செய்யப் பட்டது தமிழ்நாட்டில்? இப்போது யோசித்துப் பார்த்தால் அது எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது. பாவம், அது ஒரு எளிய தமிழ்க் குருவி. உள்ளூர்க் குருவியாகப் பிறந்து விட்டதால் தான் இவ்வளவு அடி வாங்கியது. Pan-India குருவியாகப் பிறந்திருந்தால் தப்பித்திருக்கும்.
இந்த படம் வேறு ஒன்றுமில்லை - விஜய் தாவிய அந்த ஒரு காட்சியின் 100 எக்ஸ். Digitally remastered, pan-India குருவி. அதுவும் இரட்டைக் குருவி வேறு. அவ்வளவு தான் இந்த ஆர் ஆர் ஆர். படத்தில் ரொம்பவெல்லாம் Logic பார்க்கக் கூடாது தான். ஆனால் இது Homo sapiens பற்றிய படம்தானா இல்லை future-இல் இருந்து வந்த உருமாறிய Homo sapiens பற்றிய படமா என்றே தெரியவில்லை.
பளு தூக்கும் திறன், பறக்கும் திறன், பேசும் டெசிபெல் அளவு என எல்லாமே மனித சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் dialogue delivery பாணி மட்டும் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. அதுவும் PTR தமிழில். பாதாள சிறையில் இருக்கும் ராம் சரணை, 'மோகன்லால்-lite' போல் இருக்கும் NTR விடுவிக்கிறார். அப்போது PTR ஒரு வசனம் பேசுகிறார் பாருங்கள். பாரதிக் கண்ணம்மா சமையல் அம்மா தோற்றார். அத்தனை பீடிகை, அத்தனை இழுவை, அத்தனை மிகையுணர்ச்சி.
தூக்கு மேடையில் இருந்து ஒரு பாட்டு வேறு பாடுகிறார் NTR. வியூகமோ விவேகமோ- எந்த படம் என்று தெரியவில்லை. வி-யில் ஆரம்பிக்கும் ஒரு அஜித் படத்தில் காஜல் அகர்வாலைக் கட்டி போட்டு வைத்திருக்கும் போது அவரும் இதே மாதிரி ஒரு பாட்டு பாடுவார். அது தான் நியாபகம் வந்தது. பாருங்கள் ஷங்கர் மட்டுமல்ல, விஜய், அஜித்துக்கும் சேர்த்து உழைக்கிறார் ராஜுபலி.
சரி, அப்படி என்னத் தான் கதை? பெண் குழந்தையைக் கடத்தி விட்டார்கள். அதை மீட்டு வர வேண்டும். அவ்வளவு தானே? சில பல problematic விஷயங்கள் இருந்தாலும் இதே synopsis கொண்ட நெல்சனின் டாக்டர் படம் தான் எவ்வளவு சுவாரசியமாக இருந்தது? இத்தனை பொருட்செலவு செய்தும் கிஞ்சித்தும் சுவையில்லாத இந்த பண்டத்தை நம்மிடம் எப்படி நுகரக் கொடுக்கிறார்கள்? கேட்டால் சில படங்களை மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்த்தால் தான் பிடிக்கும் என்பார்கள். மூளை மட்டுமல்ல, ஆடைகளைக் கழற்றிவிட்டு ஆதிவாசியாக மாறிப் பார்த்தாலும் கூட இந்த படம் பிடிக்காது.
நன்றி :Sundar Shalinivas