எட்டு வருடங்களின் முன் 'சரிகமப' இசைப்போட்டியின் முதல் வெற்றியாளர் வர்ஷா அதீதமான திறமை மிகு பாடகி. நடுவர்களே நேயர் விருப்பம் கேட்கும் அளவுக்குப் பிரபலமானவர். அந்த போட்டி வெற்றியின் பின் பெரிதாகப் பேசப்பட்டிருக்க வேண்டியவர். ஒரு சில இசைநிகழ்ச்சிகள் தவிர்ந்து, பின்னணிப்பாடகியாகக் கொண்டாடப்படவில்லை.
நேற்றைய 'சரிகமப' நிகழ்ச்சியில் அவர், மற்றுமொரு போட்டியாளருடன் இணைந்து பாடிய 'முத்தமழை இங்கு..' பாடல், சில இடங்களில் சின்மயி பாடியதிலும் சிறப்பு என்னும் அளவுக்கு இருந்தது. அந்தப் பாடலை பலர் பாடிக் கேட்டிருந்த போதும், த்ரிஷாவை வைத்து இயக்குனர் மணிரத்னம் செய்த கானொலி மொத்தமாக அந்தப் பாடலை மறக்கச் செய்திருந்தது. நேற்று அந்தப்பாடலை வர்ஷா மீண்டும் உயிர்ப்பித்தாள். சற்றும் பிசகாத ஸ்வரஸ்தானத்தில் சொற்கள் ஒவ்வொன்றும் இசை வரிகளாகின. நடுவர்கள் மெய்சிலிர்த்துப் பாராட்டினார்கள். பார்க்க முடிந்தவர்கள்
வர்ஷா தாத்தாவிடம் இசை பயின்ற பேத்தி என எதோ ஒரு நேர்முகத்தில் சொன்ன ஞாபகம். நடந்து முடிந்த இளையவர்களுக்கான ' சரிகமப' போட்டியில் முதலிடம் பெற்ற டிவினேஸ் தாத்தாவிடம் பாட்டுப்பழகிய பேரன். பேரர்களிடம் வளரும் பிள்ளைகள் சிறப்பாக வளருகின்றார்கள் என்றே ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. தங்கள் பிள்ளைகளிடம் காட்டிய கண்டிப்பினைக் களைந்து, பேரன் பேத்திகள், பேரர்களிடம் காட்டும் கரிசனம் மிகுந்த பாசம் எளிமையானது, இயற்கையானது. எல்லாவிதமான இறுக்கங்களையும் களைந்து, ஒருவித சுதந்திர மனநிலையைத் தோற்விப்பதில் உருவாகிறது அந்தப் புத்தாக்கம்.
பேரப்பிள்ளைகளுக்கும், பேரன் பேத்திகளுக்குமான முத்தமழை சிறக்கட்டும் !