free website hit counter

களவாடப்படும் - "கவனம்!"

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு நிகழ்ச்சியின் முடிவுப் பாகங்கள் சில கவனத்தை பெற்றது. நம் கவனம் களவாடப்படுவதை அறியாமலே அதில் மணிக்கணக்கில் முழ்கியிருந்திருப்போம்.

உண்மையில் 100 நாட்கள் ஒரே வீட்டில் இறுதி நாள் வரை 'கவனமாக' இருந்த நபரை தெரிவுசெய்யும் அந்த விளையாட்டு நிகழ்ச்சியை என் பார்வையில் பார்த்தேன்.

 உங்களால் உங்கள் கைப்பேசியை பார்க்காமல் ஒரு மணி நேரமாவது இருக்க முடியுமா? அவர்கள் 100 நாட்கள் இருக்க முயற்சித்திருக்கிறார்கள். அந்தப் பெரிய வீட்டில் கொடுக்கப்படும் விளையாட்டுகள், சண்டை ,சமாதானம், சோகம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் தாண்டி தங்களது கவனம் வெளிப்புற செய்திகளால் களவாடப்படாமல் காக்க முடிந்திருக்கிறது. 

கவனச்சிதறல் அடிப்படையில் நாம் கருதுவது போல் எமது பிரச்சனையல்ல. நமது சூழலால் நாம் ஈர்க்கப்படும் அன்றாட புற காரணிகளின் சக்தியால் ஏற்படுவதை சில ஆய்வு ரீதியான தரவுகளுடன் தந்திருக்கிறார் ஜோஹன் ஹரி, - Stolen Focus புத்தகத்திற்காக. 

இன்றைய தலைமுறையினர் இப்போது ஒரு பணியில் 65 வினாடிகள் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அலுவலக ஊழியர்கள் சராசரியாக மூன்று நிமிடங்கள் மட்டுமே நிர்வகிக்கிறார்கள் என்பதையும் கண்டறிந்த ஹரி  அதன் காரணங்களை விளக்குகிறார். 

தன்னைத்தானே சுயபரிசோதனை செய்யும் ஜோஹன் ஹரி தன் ஐபோனையும் மடிக்கணனியையும் நண்பர் ஒருவர் வீட்டில் வைத்துவிட்டு இணையத் தொடர்பாடல் செய்யமுடியாத பழைய மடிக்கணனியையும் பொத்தான் அலைபேசி ஒன்றினையும் மட்டும் எடுத்துக்கொண்டு தன் இருப்பிடத்தை விட்டு தள்ளி சிறிது காலம் தனிமையில் வசிக்கிறார். இதன்போது அவருக்கு ஏற்படும் அனுபவங்களையும் மேலும் தனது பாட்காஸ்ட்களில் நேர்காணல் செய்த நிபுணர்களின் ஆய்வுத் தரவுகளையும் இடையிடையே தந்தவண்ணம் புத்தகம் நகர்கிறது.  

நாம் ஏன் கவனம் செலுத்தும் திறனை இழந்துவிட்டோம்? அதற்கான காரணங்கள் என்ன?

சமூக ஊடக வழிமுறைகள் (algorithm) உங்கள் கவனத்தை எவ்வாறு கையாள வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியதாக இருந்தாலும் சரி அல்லது நவீன பணியிடம் மேலோட்டமான, துண்டு துண்டான வேலையை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பது பற்றியதாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் ஒரே புள்ளியுடன் தொடர்புடையது: நமது கவனத்தின் வரம்புகள் சுருங்கி வருகின்றன, மேலும் இது வேண்டுமென்றே செய்யப்படுவதை குறிப்பிடுகிறார். 

இதனிடையே நம் உற்பத்தி திறனை மேம்படுத்தும் (multitasking) பல்பணி பற்றிய கட்டுக்கதையை ஆராய்ந்து அதன் கருத்தை மறுப்பதோடு எதிலும் ஆழமாக கவனம் செலுத்தும் நமது திறனை அது எவ்வாறு சிதைக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார்.  

இது தொழில்நுட்பத்தைப் பற்றியது மட்டுமல்ல. தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் கூட நமது மூளையின் செயல்பாட்டையும் கவனத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி ஹரி விவாதிக்கிறார். வாழ்க்கையைத் தொடர நீங்கள் மும்முரமாக இருக்கும்போது இந்த விஷயங்களைக் கவனிக்காமல் இருப்பது எளிது, ஆனால் அவை ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானவை என வலியுறுத்துகிறார்.

இப்புத்தகத்தில் குழந்தைகள் மற்றும் திரைகளின் தாக்கம் பற்றிய அத்தியாயங்களில்  திரை நேரம் குழந்தைகளின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது, இதனால் அவர்கள் ஆழமான, கற்பனையான விளையாட்டில் ஈடுபடுவது கடினமாகிறது என்பதைப் பற்றியும் அவர் பேசுகிறார்.

இறுதியில் மிக முக்கியமாக, எவ்வாறு உங்கள் கவனத்தை திரும்பப் பெறுவது குறித்து சில வழிமுறைகளையும் வழங்குகிறார். தியானம் மற்றும் நினைவாற்றல் பயிற்சி, டிஜிட்டல் டிடாக்ஸ் உள்ளிட்ட செயல்பாடுகளுடன் உங்கள் தொழில்நுட்பத்தைப் பூட்ட K-safe அல்லது உங்கள் மடிக்கணினியை ஆஃப்லைனில் வைத்திருக்க Freedom செயலி போன்ற கருவிகளைப் பயன்படுத்துதல் ஆகிய தீர்வுகளை தந்து சிதறிய கவனத்தை மேம்படுத்துவது குறித்து பேசுகிறார். 

கவனம் செலுத்தமுடியாமல் தடுமாறும் அல்லது தொடர்ந்து கவனச்சிதறலை நாடவேண்டியது போல் உணருபவர்களுக்கு இப்புத்தகம் நிச்சயம் மதிப்புமிக்கது. களவாடப்படும் கவனத்தையும் முக்கியமாக அதை மீட்டெடுக்க செய்யவேண்டியது என்ன எனும் ஆழமான புரிதலை பெறுவீர்கள்.

source : medium

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula