இந்த வாரத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சூயஸ் கால்வாய்க்கு மார்ல்பரோ கால்வாய் எனும் பட்டப் பெயரும், அங்கு தொடரும் ஒரு நடைமுறையில் இந்தப் பெயர் வந்ததாகவும், கப்பல் மாலுமியான Karthik Sarathi தனது சமூக வலைத்தளத்தில் சுவாரசியமான ஒரு குறிப்பினை எழுதியுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team
தரைதட்டி நின்ற EVER GIVEN இறுதியாக மீட்கப்பட்டு மீண்டும் தன் பயணத்தை தொடங்கிவிட்டது. 6 நாட்களாக வேறு வேலையே ஓடவில்லை. எழுந்தால் படுத்தால் என எப்போதுமே இதே சிந்தனை தான். இன்று இரவு நிம்மதியாக உறங்கலாம் என நினைக்கிறேன். இதில் நான் ஏன் இதைப்பற்றி இங்கே எழுதவில்லை என நண்பர்களின் அன்புத் தொல்லை வேறு.
இணையம், ஊடகம், சமூக வலைதளம் என எங்கு போனாலும் இதைப்பற்றிய செய்திகள் தான். சூயஸ் கால்வாய் பற்றி வாசித்ததையே மீண்டும் மீண்டும் வாசித்து அயர்ச்சியடைந்ததோடு YouTube இல் காணொளிகளை பார்த்து கடைசியில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானது தான் மிச்சம்.
சூயஸ் கால்வாய்க்கு நாங்கள் மாலுமிகள் மட்டுமே அறிந்த ஒரு பட்டப்பெயர் உண்டு. அது மார்ல்பரோ கால்வாய் (Marlboro Canal). காரணம் ஆரம்ப கால சூயஸ் வரலாற்றில் கால்வாய் வழியே கப்பல்கள் செல்வதற்கான அனுமதிக்காக நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும். சில பணக்கார கம்பெனி கப்பல்கள் நிரந்தர கட்டணத்தை விட கூடுதலான லஞ்சப்பணத்தை டாலரில் கொடுத்து சீக்கிரம் அனுமதி பெற்று விடுவார்கள். சாதாரண நிரந்தர அனுமதி கட்டணமே குறைந்தது 25 லட்சத்திலிருந்து பல கோடி ரூபாய் வரை இருக்கும். கட்டணத்திற்கு மேலாக கூடுதலாக லஞ்சம் கொடுக்க முடியாத கப்பல்களுக்கு கடைசியில் தான் அனுமதி கிடைக்கும்.
இதில் சுவாரஸ்யமான ஒரு விசயம் என்னவென்றால் இவர்களுக்கு லஞ்சமாக அமெரிக்க டாலர்கள் மட்டும் கொடுத்தால் போதாது. கூடவே சிகரெட் கார்டொன்களும் (ஒரு கார்டொனில் 200 துண்டு சிகரெட் இருக்கும்) கொடுக்க வேண்டும். காரணம் எகிப்தில் சிகரெட்டின் விலை அதிகம். மேலும் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது ஆசியாவில் சிகரெட்டின் விலை மிகமிகக் குறைவு. எத்தனையோ வகை சிகரெட்கள் இருந்தாலும் மார்ல்பரோ மட்டும்தான் அவர்களின் முதன்மை விருப்பம்.
சீனாவிலிருந்து வரும் கப்பல்களில் சீனாவின் மட்டமான மலிவு விலை சிகரெட்டை கொடுத்துவிடுவார்கள் என்பதால் மார்ல்பரோவை மட்டுமே பெற்றுக்கொள்வது என உறுதியாக இருப்பார்கள். சிங்கப்பூரில் மட்டுமே மால்ர்பரோ கிடைக்கும் என்பதும் கூடுதலாக அதுதான் தரமானது என்பதும் அவர்கள் எண்ணம். ஆனால் என் தாத்தாவிற்கோ இருப்பதிலேயே உப்புசப்பில்லாத சிகரெட் என்றால் அது மார்ல்பரோ தான். அதனால் அவருக்கு மட்டும் இந்தோனேசியாவின் 'உடாங்கரம்' வகை சிகரெட் வாங்கி வருவது என் வழக்கம்.
விந்தை என்னவென்றால் இந்த கலாச்சாரம் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தொடர்வது மட்டுமல்லாமல் அங்கிருந்து உலகெங்கிலும் உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் பரவி இன்றும் நடைமுறையில் உள்ளது என்பது தான். எந்த நாட்டிற்கு கப்பல் சென்றாலுமே அங்கிருப்பவர்களுக்கு சிகரெட் கார்டொன்கள் கொடுக்க வேண்டும். நாங்களும் இதற்காக மலிவாக கிடைக்கும் நாடுகளில் சிகரெட்டை மூட்டை மூட்டையாக வாங்கி கப்பலில் வைத்துக்கொண்டு எங்களின் தேவைக்காகவும் பிறருக்கு கொடுப்பதற்காகவும் பயன்படுத்திக்கொள்வோம்.
ஒரு துறைமுகத்தையோ கால்வாயையோ ஆற்றையோ கப்பல் அடையும் போது ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பே கப்பலின் கட்டுப்பாடுகள் அனைத்தும் பைலட்கள் என்பவர்களின் கைகளுக்கு சென்றுவிடும். அந்தந்த பகுதியின் நீர்வழி பற்றிய நிபுணத்துவம் பெற்ற இவர்கள் பெரும்பாலும் முன்னாள் கேப்டன்களாக இருப்பார்கள். படகுகளில் வரும் இவர்கள் கப்பலை அடைந்து கப்பலின் கட்டுப்பாட்டை தாங்கள் எடுத்துக்கொண்ட பிறகு கப்பலை உள்ளே எடுத்து செல்வார்கள். கப்பல் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி பிரச்சினை இல்லாத பகுதியை அடைந்தபின் மீண்டும் கப்பலை விட்டு இறங்கி படகுகளில் சென்று விடுவார்கள்.
சூயஸின் 120 நாட்டிகல் மைல் தூரத்தை கடக்க கப்பல்களுக்கு குறைந்தது 15 மணி நேரமாவது ஆகும். இதற்காக இங்கு இரண்டிலிருந்து மூன்று பைலட்கள் வரை கப்பலுக்கு வருவார்கள். ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரண்டு கார்டொன்கள் மார்ல்பரோ சிகரெட் கொடுக்க வேண்டும். எனது கேப்டன் சிகரெட் கார்டொன்களை ஒரு A4 தாளில் சுற்றி கூடவே 100 டாலர்கள் வைத்து ஒவ்வொரு பைலட்டுக்கும் தனித்தனியாக கொடுப்பார். தாளை திறந்து பணத்தை எடுத்து பாக்கெட்டுக்குள் வைத்தபிறகு மிகமெல்ல கவனமாக கண்களால் நோட்டமிட்டு மார்ல்பரோவின் பெயர் அட்டையில் இருக்கிறதா என உறுதிசெய்தபின் பையில் திணித்துக்கொள்வார்கள்.
பைலட்களின் கட்டுப்பாட்டில் கப்பல் இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகளில் ஏதேனும் சந்தேகம் வந்தாலோ அல்லது திட்டமிடப்பட்ட வழியிலிருந்து கப்பல் விலகிச் செல்வதாக தெரிந்தாலோ அவர்களிடம் இருக்கும் கப்பலின் கட்டுப்பாட்டை தனதாக்கிக் கொள்வதற்கான முழு அதிகாரமும் கப்பலின் நேவிகேஷன் ஆஃபீசரான எங்களுக்கு உண்டு. அதே நேரம் கேப்டன் நினைத்தால் எங்கள் எல்லோரிடமிருந்தும் எப்போது வேண்டுமென்றாலும் அதிகாரத்தை தனதாக்கிக் கொள்ளலாம்.
EVER GIVEN தன் வழியிலிருந்து விலகி தரை தட்டியதற்கு புழுதிப்புயலை காரணமாக சொன்னாலும் இவர்களில் யாரோ செய்த தவறு தான் முதன்மையான காரணமாக இருக்க முடியும். உலகிலேயே THE BEST OFFICERS என பெயரெடுத்த இந்தியர்களால் தான் இந்த கப்பல் இயக்கப்பட்டது என்பதும் கூடுதலான செய்தி.