கேரளாவில் கோடை கால பம்பர் பரிசு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் முதல் பரிசாக ரூபாய் 6 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள பட்டிமட்டம் என்ற இடத்தில் பாக்கியலக்ஷ்மி லாட்டரி ஏஜன்சியில் ஸ்மிஜா மோகன் என்ற பெண் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்துள்ளார்.
வறுமையிலும்....நேர்மை...!
இவரிடத்தில் சந்திரன் என்பவர் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். மேலும் சந்திரன் கடனுக்கு லாட்டரி சீட்டு வாங்குவதும், பின்னர் பணத்தை திருப்பி கொடுப்பதும் வழக்கம்,
அந்த வகையில் சந்திரன் ஸ்மிஜா மோகனுக்கு கால் செய்து, கோடைகால பம்பர் பரிசு லாட்டரி சீட்டு தனக்கு ஒன்று வேண்டும் எனவும், பணத்தை நேரில் பார்க்கும்போது தருவதாகவும் கூறியுள்ளார்
இதனை அடுத்து ஸ்மிஜா மோகனும் எஸ்.டி 316142 என்ற லாட்டரி சீட்டை சந்திரனுக்காக எடுத்து வைத்துத்துள்ளார். இந்நிலையில் சந்திரனுக்காக ஸ்மிஜா மோகன் எடுத்துவைத்த லாட்டரி சீட்டிற்கு 6 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனை அடுத்து ஸ்மிஜா மோகன் சந்திரனுக்கு போன் செய்து விவரத்தை கூறி, அந்த லாட்டரி சீட்டை சந்திரனிடமே ஒப்படைத்தார். லாட்டரி டிக்கெட்டிற்கு கொடுக்க வேண்டிய ரூ. 200 உடனடியாக கொடுத்து விட்டு கண்ணீர் மல்க ஸ்மிஜா மோகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இத்தனைக்கும் ஸ்மிஜாவின் இரு பிள்ளைகளும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,தனது குழந்தைகளுக்கு சிகிச்சை செய்ய பணம் தேவைப்பட்டும், பரிசு விழுந்த சீட்டு தன்னிடமே இருந்தும் கூட, ஸ்மிஜா மோகன் நினைத்திருந்தால் அந்த லாட்டரி சீட்டு தனதுதான் என கூறி அந்த பரிசினை பெற்றிருக்க முடியும். ஆனாலும் அந்த நேரத்தில் மிகவும் நேர்மையாக நடந்துகொண்டு, அந்த சீட்டை சந்திரனிடம் ஒப்படைத்த ஸ்மிஜா மோகனுக்கு தற்போது பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.