பொதுவாக நம்மிடையே தனிமை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவும், கொடுமையான ஒன்றாகவுமே பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஒரு சில வலிந்த தனிமை விரும்பிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். பெரும்பாலும் எல்லோரோடும் நன்றாக சிரித்து பேசக்கூடியவர்கள் தனிமையில் இருக்க விரும்புவதில்லை. கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர்கள் தனிமையில் இருக்கவே விரும்புகின்றனர். அன்றாட வாழ்க்கையில் இத்தகைய வகைப்பட்ட மனிதர்களை நாம் சந்தித்திருப்போம்.
ஒரு மனிதன் சமூகத்திலிருந்து தனித்திருக்கையில் மனச்சோர்வு, மன அழுத்தம், உடல் பருமன், இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடலியல், உளவியல் நோய் நிலமைகளுக்கு உள்ளாக கூடிய வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் சமூகத்துடன் இணைந்து வாழ்பவர்களை விட அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
ஆனால் இதற்கான மாற்றுவழிகள் குறித்த சில ஆய்வுகளில் தனிமை ஒரு மனிதனை தெளிவான சிந்தனையின் பால் இட்டுச்செல்ல வழிவகுப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒருவர் தனிமையில் இருக்கையில் தனக்கு எது உன்மையில் எது தேவை, அதற்காக தான் என்ன செய்ய வேண்டும், தற்போது தன் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது என்பதை பற்றிய தெளிவான முடிவுகளை எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை தனிமை ஏற்படுத்தி கொடுக்கும். அது அவனை புதிய படைப்புகளை உருவாக்கவும் தூண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.
பொதுவாக சமூகத்திலிருந்து தனித்துவிடப்படுதலும், தனித்திருத்தலும் வலி தரக்கூடிய ஒன்றாக மனிதர்களால் உணரப்படுவதால் அந்த தனிமையை இனிமையாக்கிக் கொள்வதற்கான புதிய செயல்கள் தொடர்பான அறிவூட்டலும் இன்றைய தேவையொன்றாகவே இருக்கிறது.
தனிமையான சந்தர்ப்பங்களில் தனக்கு பிடித்த இசையை செவி மடுத்தல், பயணங்களை மேற்கொள்ளல், இயற்கையை நேசிக்க இரசிக்க நேரத்தை செலவிடல், மாறுபட்ட இயற்கையான சூழல்களுக்கு சென்று இயற்கையுடன் இணைந்திருத்தல் போன்றவற்றை செய்வதன் மூலம் தனிமை வலி தரக்கூடிய ஒன்று என்ற எண்ணத்திலிருந்து விடுபட முடியும்.
மேலும் தனித்திருத்தலில் பல நன்மைகள் கூட இருக்கத்தான் செய்கின்றன. சாதரணமாக பலர் சுற்றியிருக்கையில் ஒரு வேலையில் ஈடுபடுவதற்கும் தனித்திருக்கையில் அதே வேலையை செய்வதற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கிறது. அதிக பேர் இருக்கும் போதிலே முறையாகவோ, வினைத்திறனாகவோ செய்து முடிப்பது சிரமமான ஒன்றாகும். அதேவேளை தனித்திருக்கையில் எந்தவிதமான கவனச்சிதறல்களும் இல்லாமல் வினைத்திறனாக வேலையை செய்து முடிக்கலாம்.
அதேபோல், குறித்த வேலை தொடர்பான நுணுக்கங்களையும், இலகுமுறைகளையும் அறிவதற்கும் தனிமை வழிவகுக்கிறது. தன்னை தனிமை படுத்தி கொள்பவர்கள் பெரும்பாலும் கல்வியிலும் சிறந்து விளங்குபவர்களாக இருப்பதை பார்க்கலாம். தனது வாழ்க்கை, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் தனிமையில் இருக்கையில் அதிகம் தோன்றுவதனால் நேர்மைறையான, எதிர்மறையான எண்ணங்கள் பற்றிய தெளிவொன்றை பெறவும் உறுதியான முடிவுகளை எடுக்கவும் தனிமை வழிசெய்கிறது.
சுவாரஸ்யம் என்னவென்றால், ஒப்பீட்டளவில் பலர் தனிமையை வெறுத்தாலும் தனிமை விரும்பிகள் பலரும் தனித்திருக்கையில் புதுவித உற்சாகத்தையும் இன்பத்தையும் பெறுவதாகவும் ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மஹி...