வெள்ளையர்களால் "பிசாசின் மலம்" என்று சபிக்கப்பட்டு பின்னாளில் "கடவுளின் மணம்" என்று கொண்டாடப்பட்ட பெருங்காயத்தின் தனிப் பெரும் சிறப்புகளை இவ் வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.
தாவரவியல் பெயர் -Ferula asafoetida
 குடும்பப் பெயர் - Umbelliferae
 ஆங்கிலப் பெயர் -Asafoetida
 சிங்களப் பெயர் - பெருங்காயம் 
 சமஸ்கிருதப் பெயர் ஹிங்கு -
 வேறு பெயர்கள் - அத்தியாகிரகம், இரணம், கந்தி, காயம்,சந்துநாசம், பூதநாசம், வல்லீகம்
பயன்படும் பகுதிகள் பிசின்
சுவை -கைப்பு, கரகரப்பு
 வீரியம் -வெப்பம்
 விபாகம் - கார்ப்பு
வேதியியற் சத்துகள் Volatile oil, Resin ,Gum, Malic acid, Ferulaic acid, umbelliferone, Farnesiferols, Pinene, Sulphated terpenes, Cadinene, Vanillin
மருத்துவச் செய்கைகள் 
Anthelmintic- புழுக்கொல்லி
Antispasmodic- இசிவகற்றி
Aphrodisiac- இன்பம் பெருக்கி
Carminative- அகட்டுவாய்வகற்றி
Diuretic- சிறுநீர் பெருக்கி
Emmenagogue- ருதுவுண்டாக்கி
Expectorant- கோழையகற்றி
Laxative- மலமிளக்கி 
Stimulant- வெப்பமுண்டாக்கி
 தீரும் நோய்கள் 
இதனால் பல் நோய்கள், பாம்பு நஞ்சுகள், தேள் நஞ்சு, மந்தம், ஏப்பம், வாதம், சூதகவாயு, சூதகசூலை, குன்மம், பெருவயிறு, குருதியிலுள்ள நுண்கிருமிகள், கபத்தால் பிறந்த வலிகள், உடல் கடுப்பு இவை போகும்.
பயன்படுத்தும் முறைகள் 
குறிப்பு-
 இதனை பொரித்து உபயோகிப்பதே நலம்; பச்சையாய் உள்ளெடுத்தால் வாந்தி உண்டாக்கும்; தலை சுற்றும்; தீக்குற்றத்தை பெருகச் செய்யும்.
தொடர்ச்சியாக சாப்பிட்டுவர தொண்டைப்புண், வயிற்றுப்பல், கழிச்சல், நீர் எரிச்சல், புளியேப்பம் இவைகளை உண்டு பண்ணும்.
காயத்தை நீர் விட்டரைத்து தேள் கடி, புடைத்த காயங்கள் மேல் பூசலாம்.
காயத்துடன் உழுந்து சேர்த்துப் பொடித்து தீயிலிட்டு புகைத்த புகையை உட்செலுத்த இரைப்பு, உப்புசம் நீங்கும்.
40 ml நீரில் 2g காயத்தை கரைத்து ஒரு சங்களவு எடுத்துச் சிறிது ஓமத்தீநீர் சேர்த்துக்கொடுக்க குழந்தைகளுக்குண்டாகும் மாந்தம் , வயிற்றுப் பொருமல் போகும்.
எண்ணெயிலிட்டு காய்ச்சிக் காதுக்கிட காதுவலி நீங்கும்.
வாலேந்திரபோளம், மிளகு இவைகளுடன் சேர்த்துக் கொடுக்க சூதகக் கட்டு ஆறும்.
கோழிமுட்டை மஞ்சட்கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்கவலி நீங்கும்.
சுக்கு, திப்பலி, மிளகு, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து கால் பங்கு பெருங்காயம் சேர்த்து பொடித்து 325-650 mg அளவு சோறுண்ணும் போது முதற்பிடியுடன் சேர்த்துண்டுவர மந்தத்தை விலக்கி பசியையும் சீரணத்தையும் உண்டாக்குவதுடன் வயிற்றுப்புசம் முதலியவற்றையும் போக்கும்.
காயத்தை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகளுக்குண்டாகும் கக்குவான் குணமாகும்.
குழந்தைகள் வயிற்றிலுண்டாகும் பூச்சிகளை வெளிப்படுத்த இதை நீரிலிட்டு அரைத்துக் கலக்கி பீச்சாக செலுத்தலாம்.
அபினும் காயமும் சேர்த்து சொத்தைப் பல்லில் வைக்க வலி நீங்கும்.
மகப்பேற்றின் பின் கருப்பையிலுள்ள அழுக்கை வெளிப்படுத்த காயத்தை பொரித்து வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலைதோறும் கொடுக்கலாம்.
 ~சூர்யநிலா
																						
     
     
    