கோவிட் பெருந்தோற்றுக்குப் பின்னைய காலத்திலான வாழ்வியல் என்பது குறித்த கவனம் பெறும் காலம் இது. பெருந்தொற்று என்பது முற்றாக முடிந்து விடவில்லை என்றே உலக சுகாதார அமைப்பும், சுவிற்சர்லாந்து உட்பட கோவிட் விதிகளைத் தளர்த்தியுள்ள நாடுகளும் தெரிவிக்கின்றன.
முன்னைய பெருந்தொற்றுக்களான, பெரியம்மை, ஸ்பானிஷ்ப்ளு, என்பனவும் பலதடவைகள் வீழ்ச்சியும், எழுச்சியும் பெற்றே மறைந்திருக்கின்றன. உண்மையில் இது வைரஸுடன் வாழப்பழகுதல் காலத்தின் மற்றுமொரு கட்டம் என்றே சொல்லாம். இக்காலத்தில் உடல், உளம் சார்ந்து, நாம் சிலவிடயங்களைக் கவனத்திலும், பழக்கத்திலும் கொள்ளுதல் நல்லது. இதையே மருத்து உலகின் நிபுணர்களும், மனவள அறிஞர்களும் , வலியுறுத்துகின்றார்கள்.
சுமார் இரண்டு ஆண்டு காலப் பெருமுடக்கமும், தொற்று நோயும், ஏற்படுத்தியிருக்கும் உடலியல், உளவியல் தாக்கங்களின் தொடர் விளைவுகள் தொடரும் காலமாக இந்தக் காலம் இருக்கப் போகிறது. அவை குறித்தும் அவற்றுக்கான மாற்றீடுகள் குறித்தும் சிறிது பார்க்கலாம்.
நாம் எடுத்துக் கொண்ட தடுப்பூசிகளின் செயல் திறன் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருக்கப் போவதில்லை என்பதை முதலில் மனமிருத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் அவற்றின் பக்கவிளைவுகளும் ஒரேமாதிரியாக இருக்கப் போவதில்லை. மேலும் அவை குறித்து திடமான மருத்துவக் குறிப்புக்களும் முழுமையாக இல்லையெனவும் சொல்லலாம். ஆதலால் நமது நாளாந்த உடலியக்கங்கள் குறித்த அவதானிப்பும், தனிமனித சூழல் பாதுகாப்பும் முக்கியமானது. இதை இன்னும் எளிமையாகச் சொல்வதாயின், புதிய உடல் உபாதைகள், அல்லது நோய்க் கூற்றின் அறிகுறிகள், அவை சிறிதாக இருந்தாலும், குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சுவிற்சர்லாந்தில் உக்ரைன் நெருக்கடி 130 நிறுவனங்களைப் பாதிக்கலாம் !
அதேபோன்று கோவிட் நோய் தாக்கத்திற்கு உள்ளாகி மீண்டவர்களும் தங்கள் உடல் இயக்க மாறுபாடுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக பெருஞ் சிகிச்சை பெற்றவர்கள், நீண்ட கால நோய் குறியீடுகள் உள்ளவர்கள், இந்த மாற்றங்கள் குறித்து அவதானமாக இருப்பது அவசியம். உடல்சோர்வு, மூச்சிரைப்பு, என்பவை குறித்த அவதானிப்புக்கள் அவசியமானவை. அவதானிப்புக்கள் தொடர்பான இந்தக் குறிப்புக்கள் அச்சமூட்டுவதற்கானவை அல்ல, ஆலோசகைக்கானவை மட்டுமே.
உடலியக்க மாறுபாடுகளில் அக்கறை கொள்ளும் அதேயளவிற்கு, உளவியக்கங்கள் தொடர்பிலும் நாம் அக்கறை கொள்ள வேண்டும். பெருந்தொற்றின் பக்க விளைவுகள் உடலியக்கத்தில் மாற்றம் தருவது போல், பெருந்தொற்று பேரிடர் காலத்தின் நெருக்கடிகள் தரும் மன அழுத்தம் காரணமாக எழக்கூடிய உளவியற் சிக்கல்களும் அவதானத்துக்குரியவையே. இன்னும் சொல்லவதாயின் உடலியத்தினைக் காட்டிலும், உளவியல் ஏற்படுத்தப் போகும் தாக்கம் குறித்தே அறிஞர்கள் அதிக அக்கறை கொள்கின்றனர்.
கோவிட் பெருந்தொற்றின் பின்னையதான காலத்தில், குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பேரிடர் ஒன்றின் பின்னதாக எழக் கூடிய சமூகச்சிக்கலே. நீண்ட காலத் தனிமைச் சோர்வு, பொருளாதாரப் பின்னடைவு, ஆற்றாமை எனப் பல்வேறு பிர்ச்சனைகளால் எழக்கூடிய மன அழுத்தங்கள் இவ்வாறான பிரச்சனைகளுக்குக் காரணமாகும்.
இதனைச் சீரமைத்துக் கொள்ள நம் உணவுப் பழக்கம் மற்றும் நாளாந்த செயல் வடிவஙகள் என்பவற்றில் சில மாற்றங்களைச் செய்து கொள்வது நல்ல மாற்றங்களைத் தரும். நமது நாளாந்த உணவுப் பழக்கத்தில் மாமிச உணவுகளையும், கொழுப்புச் சத்தான உணவுகளையும் குறைத்துக் கொள்வது உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும்.
நாம் வாழும் வீட்டுச் சூழல் நமது வாழ்நிலையில் முக்கியமானது. அந்த வகையில் வீட்டைத் துப்பரவாக வைததுக் கொள்ளல், வீட்டையும், நம்மையும் அழகு படுத்தல், மாற்றியமைத்தல், என்பன மனதுக்கு உற்சாகம் தரும்.
தினசரி நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, த்யானப்பயிற்சி, என்பனவும், காலையிலோ மாலையிலோ சிறிது நேரமாயினும் வழிபாடியற்றுவதும் மன அமைதியினைத் தரும். அதேபோல் தினசரி சிறிது நேரமாயினும் வாசிப்பது அல்லது எழுதுவது வரைவது என்பனவும் நன்மை தரும். வாசிப்பு என்பதனை இலத்திரனியல் கருவிகளான கணினி, தொலைபேசி, என்பதிலிருந்து தவிர்த்து, புத்தகம், பத்திரிகை என வாசிப்பது நல்லது. இலத்திரனியற் கருவிகளில் நீண்ட நேரம் வாசிப்பதும் மனச் சோர்வினைத் தரக் கூடும்.
பூ மரங்கள் வளர்ப்பது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, பேசுவது, சிறு தோட்டங்கள் செய்வது, நல்ல இசைக் கேட்பது, நாட்டியமாடுவது, எழுதுவது, வரைவது, என ஏதாயினும் ஒரு விடயத்தை தினசரி சில மணிநேரங்கள் செய்வதற்குப் பழகிக் கொள்ளுதல் நல்லது. அதேவேளை அதனை தினமும் ஒரே மாதிரியாக அல்லாமல் மாற்றங்களுடன் செய்து, புதிதாக முயற்சிப்பது மன அழுத்தம் நீக்கி ஆற்றலைப் பெருக்கும்.
அடுத்து வரும் காலப்பகுதி உலகெங்கிலும் பொருளாதார நலிவு மிக்க காலமாக இருக்குமென்பதைக் கருத்திற்கொண்டு, நமது செலவினங்களைத் திட்டமிடுதலும், மட்டுப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். அதற்காக எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்ள வேண்டும் என்பதுமில்லை.
எழக்கூடிய குழப்பங்கள், பிரச்சனைகள் என்பவற்றிலிருந்து ஆறுதல் பெறுவதற்காக போதைப் பொருட்களை நாடுவதோ, அல்லது தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாதல் என்பன மேலும் மனச் சோர்வினையும், உடலயற்சியினையுமே தரும் என்பதை எப்போதும் நினைவிற் கொள்ள வேண்டும்.
வாழ நினைத்தால் வாழலாம் நல் வழியா இல்லைப் பூமியில் என்ற பாடல்வரிகளை மனதிற் கொண்டு வாழ்ந்து பார்க்கலாம்...