காலநிலை மாற்றம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு குரல்கள் அங்காங்கே ஒலித்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பட்டாசு இல்லாத தீபாவளி பண்டிகை என்பது கடினம்.
இதற்காக பசுமை பட்டாசு எனும் மேம்படுத்தப்பட்ட நவீன வகை பட்டாசுகளை மட்டும் வெடிக்க இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களிடையே அதற்கான போதுமான ஆர்வம் குறைவாக காணப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் மரக்கன்றுகளை எரிப்பதால் ஏற்பட்டுள்ள மாசுபாடு காற்றின் தரத்தை குறைத்திருப்பதாக, தேசிய தலைநகர் மண்டலம் (NCR) கவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு ராஜஸ்தான் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநில அரசுகள் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை மனதில் கொண்டு பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன, அதே நேரத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் பசுமை பட்டாசுகளை அனுமதித்துள்ளன.
பசுமை பட்டாசு என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் 'நீரி'யின் (NEERI) கண்டுபிடிப்பு ஆகும்.
பாரம்பரிய பட்டாசுகளை விட இந்த பசுமை பட்டாசுகள் மாசுபடுத்தும் தன்மை மிக குறைவு என்பதுடன் அவை ஏற்படுத்தும் ஒலி அளவும் குறைவு ஆகும்.
பச்சை பட்டாசுகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் சில :
1. பசுமை பட்டாசுகள் மாசு குறைந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் இரசாயன உருவாக்கம், உற்பத்தி செய்யப்படும் தூசியை அடக்குவதன் மூலம் வளிமண்டலத்தில் குறைக்கப்பட்ட துகள் உமிழ்வை உறுதி செய்கிறது.
2. வழக்கமான பட்டாசுகள் சுமார் 160 டெசிபல் ஒலியை வெளியிடும் அதே வேளையில், பச்சை பட்டாசுகளின் உமிழ்வு விகிதம் 110-125 டெசிபல்களாக மட்டுமே உள்ளது.
3. இந்தியாவில் மூன்று வகையான பசுமை பட்டாசுகள் உள்ளன. அவை SWAS, STAR மற்றும் SAFAL.
இதில் வாட்டர் ரிலீசர் எனும் இன்னுமொரு வகை வெடித்தவுடன் கரியாக மாறாமல் நீர்த்துளிகளாக மாறி கரைந்துவிடும். இதன்போது சல்பஃபர் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் கரைந்துவிடுவதால் மாசை குறைக்கச்செய்கிறது.
5. பசுமை பட்டாசுகளும், பல சமயங்களில், அலுமினியம், பேரியம், பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் கார்பன் போன்ற மாசுபடுத்தும் இரசாயனங்களைப் பயன்படுத்துகின்றன, ஆனால் அளவு குறைக்கப்படுவதால், உமிழ்வை சுமார் 30 சதவீதம் குறைக்கிறது. சிலவகையான பசுமை பட்டாசுகளில், இந்த இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
எனவே பாதுகாப்பாகவும் பசுமையாகவும் தீபாவளித்திருநாளை வரவேற்று கொண்டாடுவோம்!