நேற்று கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் திகதி மாலை தென்னமெரிக்காவின் பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான அடுத்த தலைமுறைக்கான தொலைக் காட்டியான ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைக் காட்டி (JWST) வெற்றிகரமாக ஏரியான் 5 ராக்கெட்டு மூலம் விண்வெளிக்கு ஏவப் பட்டது.
பூமியில் இருந்து சுமார் 15 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் அதாவது பூமியில் இருந்து நிலவுக்கான தூரத்தை விட அதிக தொலைவில் L2 லெக்ராஞ்ச் என்ற ஈர்ப்பு விசை சமநிலை புள்ளியில் இது நிலை நிறுத்தப் படவுள்ளது. சுமார் 9.7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கடந்த இரு தசாப்தத்துக்கும் அதிகமாக கட்டுமானத்தில் இருந்த அகச்சிவப்புக் கதிர் தொலைக் காட்டியான (Infrared Space Telescope) இது 17 நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் அமெரிக்காவின் நாசா (NASA), ஐரோப்பாவின் ஈசா (ESA) மற்றும் கனேடிய விண்வெளி ஆய்வு நிலையமான (CSA) ஆகியவை பங்கு வகித்த செயற்திட்டமாகும்.
இந்த JWST விண் தொலைக் காட்டி பூமிக்கு மேலே சுற்று வட்டப் பாதையில் வலம் வரும் போது வரக்கூடிய குறைந்த பட்சத் தூரமே 374 000 கிலோ மீட்டர்கள் ஆகும். சுமார் 6500 Kg எடை கொண்ட அதி நவீன உபகரணங்கள் அடங்கிய இத்தொலைக் காட்டியில் தங்க முலாம் பூசிய சோலார் பேனல்களில் சூரிய ஒளி எதிர்ப்பு பில்டர்களும் இருப்பதால் இது 270 டிகிரி வெப்பத்தைக் கூடத் தாங்கக் கூடியது. அதேவேளை இதன் மறுபக்கம் மைனஸ் 270 டிகிரி குளிரையும் தாங்கும் விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது வலம் வரும் L2 என்ற சுற்று வட்டப் பாதையானது பூமிக்குப் பின் அதன் நிழலில் சூரியனை சுற்றும் வகையில் இருக்கும். இதனால் பிரபஞ்சத்தின் எண்ணற்ற புதிர்களை ஆராயும் வாய்ப்பு இதற்குக் கிடைத்துள்ளது. இன்னும் 29 நாட்களில் L2 சுற்று வட்டப் பாதையை அடையவுள்ள JWST தொலைக் காட்டி அதன் பின் படிப்படியாக தனது சோலார் பேனல்கள் மற்றும் ஆடிகளைத் திறந்து அகச்சிவப்புக் கதிர்கள் மூலமான துல்லியமான புகைப் படங்களைப் பெறும் தனது ஆய்வைத் தொடங்கவுள்ளது.
ஹபிள் தொலைக் காட்டியின் ஆய்வுப் பணியை அதவி விட நூறு மடங்கு மிக அதிக துல்லியத்தில் தொடரவிருப்பதாக கருதப் படும் JWST இன் ஆய்வுகள் முக்கியமாக வானவியல் (Astronomy) மற்றும் பிரபஞ்சவியல் (Cosmology) ஆகிய இரு முக்கிய அறிவியல் பிரிவுகளுக்கும் பங்களிக்கக் கூடியதாகும். அதாவது பூமிக்கு ஒப்பான உயிர் வாழ்க்கையைக் கொண்டிருக்கக் கூடிய வேற்றுக் கிரகங்களைக் (Exoplanets) கண்டறிதல் முதல், பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குப் பின் முதலில் தோன்றிய தொன்மையான அண்டங்களை (First Galaxies) இனம் காணுதல் வரை இதன் ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கவுள்ளன.
மனிதனின் நவீன விஞ்ஞான நாகரீகம் தோன்றியது முதல் அவனது அறிவியல் முன்னேற்றத்துக்கு மிக அதிகளவில் அவனது கற்பனை ஆற்றலும் உதவி வருகின்றது எனலாம். இதனால் தான் 20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த பௌதிகவியலாளரான அல்பேர்ட் ஐன்ஸ்டீன் அறிவை விட கற்பனை (imagination) மிக முக்கியமானது என்றுள்ளார். இந்த 21 ஆம் நூற்றாண்டில் இக்கற்பனை ஆற்றலின் உச்சத்தில் தான் JWST தொலைக் காட்டி உள்ளது. ஆம் ஏனெனில் இது மனிதக் கண்களை விட ஆயிரம் கோடி மடங்கு திறன் மிக்கது என்பது உங்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கலாம்.
மனிதனின் பிரபஞ்சவியல் (Cosmology) தொடர்பான பின்வரும் 4 முக்கியமான கற்பனை கருதுகோள் துறைகளுக்கான நிரூபணங்களை JWST வேட்டையாடவுள்ளது..
1. பிரபஞ்சத்தின் தோற்றமான பெருவெடிப்பின் (BigBang) பின் நிலவிய இருள் யுகம் (Dark Ages) கடந்து 100 மில்லியனுக்கும் 250 மில்லியனுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த Reionization எனப்படும் செயற்பாட்டில் வெளிப்பட்ட முதலாவது ஒளியை இனம் காணுதல் - இதன் மூலம் ஆதி அண்டங்கள் (First Galaxies) எவ்வாறு தோன்றின என்று விளங்கிக் கொள்ளுதல்
2. அண்டங்களின் (Galaxies) வடிவமைப்பு மற்றும் பரிணாமம் என்பவை பில்லியன் கணக்கான ஆண்டுகளாக எவ்வாறு நிகழ்கின்றன என்பது குறித்து அறிந்து கொள்ளல், அண்டங்களின் மையத்தில் அமைந்திருக்கும் அதி நிறை கருந்துளைகள் (Super Massive Black Holes) எவ்வாறு அவற்றின் இயக்கத்தில் தாக்கத்தை செலுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளல், அண்டங்களுக்கூடாக எவ்வாறு வேதியியல் தணிமங்கள் விநியோகிக்கப் படுகின்றன என்பதைக் கண்டறிதல்
3.விண்மீன்களின் தோற்றம் மற்றும் விண்மீண்களைச் சுற்றி வரும் கிரகங்களின் தோற்றம் என்பவற்றை அறிதல்
4. பல்வேறு வகையான விண்மீன்களைச் சுற்றி வரும் கிரகங்களில் உயிரினங்களின் தோற்றம் எவ்வாறு நிகழக் கூடும் என்பதை வேவு பார்த்தல்
இவ்வகையான அறிவியலின் இன்னும் எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப் படும் JWST தொலைக் காட்டி உண்மையில் நவீன அறிவியலின் உன்னத அதிசயம் என்று சொன்னால் அது மிகையாகாது.
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்