சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகமும் வாயுக் கோளமுமான வியாழக் கிரகத்துக்கு இதுவரை 95 நிலவுகள் இருப்பதாகக் கருதப் படும் அதே வேளை இதில் 91 நிலவுகள் கண்டறியப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலவுகளில் ஒன்று தான் அதிகபட்சம் எரிமலைகளால் ஆன இயோ (Io) என்ற நிலவு. அண்மைக் காலமாக வியாழனின் சுற்று வட்டப் பாதையில் இருந்து கொண்டு அதனை ஆய்வு செய்து வரும் ஜூனோ என்ற விண்கலம் இந்த இயோ நிலவில் உள்ள சில நெருப்பு ஏரிகளைத் (Lava Lakes) துல்லியமாக அகச்சிவப்புக் கதிர் புகைப் படங்கள் (Infrared rays photos) எடுத்துள்ளது.
இயோ நிலவு தொடர்பான ஆய்வு சூரிய குடும்பம் தோன்றிய புதிதில் நெருப்புக் கோளமாக இருந்த நம் பூமி பின்னர் எப்படிப் படிப் படியாகக் குளிர்வடைந்து இன்றைய உயிர் வாழிகளுக்கு ஏற்ற இடமாக மாறியது என்பது தொடர்பான பூமியின் உயிர்ப் பரிணாம ஆய்வுக்கும் மிக முக்கியமானதாகும். இந்நிலையில் Juno விண்கலத்தின் JIRAM என்ற கருவி மூலம் இயோவின் எரிமலை லாவா ஏரிகள் (Lava Lakes) துல்லியமாக Infrared முறையில் படம் பிடிக்கப் பட்டு பூமிக்கு அனுப்பப் பட்டு வருகின்றது. 1610 ஆமாண்டே பிரபல வானியலாளர் கலிலியோ கலிலி மற்றும் சிமொன் மாரியொஸ் ஆகியவர்களால் முதன் முறையாக வியாழனின் 4 முக்கிய நிலவுகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவை இயோ (IO), யுரோப்பா (Europa), கனிமீட் (Ganymede) மற்றும் கலிஸ்ட்டோ (Gallisto) ஆகியவை ஆகும். இந்த 4 நிலவுகளிலும் மிகவும் ஆராயப் பட்ட நிலவுகள் யுரோப்பா மற்றும் இயோ ஆகியவை ஆகும். 369 வருடங்கள் கழித்து தற்போது சூரிய மண்டலத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் வொயேஜர் 1 விண்கலத்தால் இயோவின் எரிமலைப் பகுதிகள் முதன் முறையாகப் படம் பிடிக்கப் பட்டிருந்தது.
தற்போது சூரிய மண்டலத்திலேயே மிகத் தீவிரமான எரிமலைச் செயற்பாடு நிகழும் கிரகமாகவும் இயோ கருதப் படுவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஒரு நிலவாக அல்லாது கிரகம் என்ற முறையில் சூரியனுக்கு மிக அண்மையில் இருக்கும் வெள்ளிக் கிரகமே இதுவரை தீவிர எரிமலைச் செயற்பாடு நிகழும் கிரகமாகக் கருதப் பட்டிருந்தது. என்றாலும், இயோவில் இன்னும் தீவிரமாக எரிமலை வெடிப்புக்கள் நிகழ்ந்து வருவதாக சமீபத்தில் கிடைக்க் பட்ட Infrared ஆய்வுப் புகைப் படங்கள் மூலம் கணிக்கப் பட்டுள்ளது.
தகவல் - Scitechdaily