சுவிற்சர்லாந்தின் தேசிய நாள் ( ஆகஸ்ட் 1 ) இன்று. இந்த நாட்டின் எழுச்சியிலும், உயர்ச்சியிலும் உள்ளுறைந்து இருக்கும் சில பண்புகள் வியப்புக்குரியவை.
உள்ளூர் உற்பத்திக்கான குறைந்த நிலவளமும், குறுநிலப் பரப்புக்களுமாகச் சிதறிக்கிடந்த இந்தச் சின்னஞ்சிறு தேசம், உலகின் கவனம் ஈர்க்கும் ஒரு நாடாக இன்று உயர்ந்து நிற்கும் வரலாற்றின் உயர்ச்சிக்குப் பின்னால் இந்நாட்டின் வங்கிச் சேவைகளை மட்டும் காரணமாகக் காட்டி நகர்ந்து சென்றிட முடியாது. இந்நாட்டின் இறுக்கமான வங்கிச் சேவைகள் பாரிய பொருளாதாரச் சுழலிடங்கள் என்பது மறுப்பதற்கில்லை என்பது போலவே இந்நாட்டு மக்களிடையே நிறைந்திருக்கும் வேறு சில பண்புகளும் நிராகரிக்க முடியாதவை.
ஒரு வலதுசாரி முதலாளித்துவச் சிந்தனை மிக்க நாடாக இருந்த போதும், மக்கள் குமுகாயத்தில் இடதுசாரிகளுக்கு நிகரான தேசியப்பற்றும், கூட்டுறவு மனப்பாண்மையும், சேமிப்பும், இவற்றின் நெறிவழியான கூட்டாட்சி அரசியலும், காணப்படுவது ஒரு வித்தியாச முரண் என்றும் சொல்லலாம். ஆனால் அதுவே அதுவே இந்நாட்டின் உயர்ச்சிக்கான அடிப்படையாகவும் கொள்ளலாம். மக்கள் மனதில் இந்த அடிப்படை மனநிலை வாய்க்கப்பபெறுவதற்கு, இங்குள்ள கட்டாய இராணுவ சேவையும் ஒரு காரணமாக அமையக் கூடும். எந்தவொரு யுத்தத்திற்கும் முனையாத இந்நாட்டின் கட்டாய இராணுவக்கட்டுமானங்கள், இளவயதிலேயே தேசியப்பற்றுதலையும், கட்டுப்பாட்டினையும், குழுநிலைத் திட்டமிடலையும், கூட்டுறவுச் செயல்நிலைகளையும் கற்றுக்கொடுக்கும் பாசறைகளாக அமைந்துவிடுகிறது எனலாம்.
முதலாளித்துவச் சிந்தனைச் செறிவு மிக்க இந்தச் சின்னஞ்சிறு தேசத்தின் கிராமங்கள் பலவற்றிலும், கிராமியக் கூட்டுறவு மையங்கள் பல இன்றும் செயற்படுகின்றன என்பது ஆச்சரியத்துக்குரியது. இவ்வாறான கூட்டுறவுச் செயற்பாடுகளில், மக்கள் விற்பனை நிலையங்கள், பாற்பண்ணைகள், சிறு தோட்டங்கள் என்பனவும் நடைபெறுகின்றன. இவற்றின் நிரவாக அலகுகள் கூட, மக்கள் மன்றங்கள் அல்லது கிராமிய அமைப்புக்களால் நிர்வகிக்கப்படுவதும் தனிச்சிறப்பு.
இவ்வாறான ஒரு கூட்டு முயற்சியாக 1889ல் Faido எனும் சுவிஸின் தென் திசைக் கிராமம் ஒன்றில் உருவாகியதுதான், திச்சினோ மாநிலத்தின் முதலாவது மின் உற்பத்தி நிலையம். கிராமத்தின் மலைப்பகுதியில் இயற்கையின் வரமாக வந்த நீர்வீழ்ச்சியின் நீரிலிருந்து நீர் மின்சாரம் பெறும் யோசனை, பாரிஸில் ஈபிள் கோபுரத்தைத் திறந்து வைப்பதோடு, நடைபெற்ற உலகளாவிய கண்காட்சியில் நீராவிக்கு மாற்று ஆற்றல் ஆதாரமாக நீர் மின்சாரம் பெரிய அளவில் உபயோகிப்பதை சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தின் வழி பிறந்தது என்கிறார்கள்.
1888 இல் ஒரு குளிர்கால மாலையில், குடிமக்கள் ஃபைடோ கிராமத்தை மின்சார ஒளியால் ஒளிரச் செய்ய முடிவு செய்தனர். இதற்கான கூட்டுறவு அமைப்பு, ஜூன் 1889 ல், நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊரின் மலைப்பகுதியில் இருந்த பியாமோக்னா நீர்வீழ்ச்சிப்பகுதியில், அடிப்படை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் விவாதிக்கப்பட்டன. ஒரு மாதகாலத்திற்குள் முறையான திட்டமிடல்கள் நிறைவு பெற்றன. சிறிய விநியோக நெட்வொர்க், மெல்லிய கம்பிகளின் வழி மின்கடத்தல், பொது மற்றும் தனியார் உட்பட 80 பயனாளிகள், சிறிய 50 கிலோவாட் ஜெனரேட்டர் எனும் திட்டம் உருவாகியது. திட்டத்திற்கான செலவு 44,000.- பிராங்குகள் என மதிப்பிடப்பட்டது. அதே ஆண்டில் டிசம்பர் 4 அன்று, சாண்ட் ஆண்ட்ரியா தேவாலயப்பிரார்த்தனையில், மின் கட்டுப்பாட்டு அலகு ஆசீர்வதிக்கப்பட்டது. 1889 டிசம்பர் 8ம்நாள், சுவிற்சர்லாந்தின் தென்மாநிலமான டிசினோவில் முதல் மின் உற்பத்தி நிலையம் எனும் சிறப்போடு செயல்படத் தொடங்கியது. 278 மின் விளக்குகளின் கார்பன் இழைகள் எரிந்து, ஊருக்குள் ஒளி வெள்ளம் பாய்ந்தது. மக்களின் கூட்டு உயர்வு மூலம் எடுக்கப்பட்ட இந்த முயற்சியின் வெற்றியை தெருக்களிலும் சதுக்கங்களிலும் மக்கள் கொண்டாடினார்கள்.
சுவிற்சர்லாந்து அரசியலில் வெளிநாட்டவர்கள் நிலை..?
இப்போது அங்கு அந்த மாநிலத்தின் முதலாவது கூட்டுறவு மின்நிலையம் அங்கு இல்லை. அது விரிவடைநடது நகராட்சிக்குச் சொந்தமான பெரு மின் உற்பத்தி அலகாக மாறிவிட்டது. ஆனாலும், பைடோ கிராமத்தின் மலைப்பகுதியில், பியாமோக்னா நீர்வீழ்ச்சிப்பகுதியில், அந்தச் சின்னஞ்சிறு மின்நிலையம் இருந்த இடத்தை மக்கள் நினைவு கூருகின்றார்கள். 2014ம் ஆண்டில் அதன் 125 ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடினார்கள். இந்நாட்டின் கூட்டுறவு எழுச்சி மற்றும் வளர்ச்சிக்கான சிறந்த உதாரணங்களில் ஒன்று பைடோ கூட்டுறவு நீர் மின்னிலைய முயற்சி எனச் சொல்லலாம்.
- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்.