கனிமவளக் கொள்ளைக்கு பலியாகவிருந்த ஒரு பச்சை பசேல் விவசாய கிராமத்தையும் என்கவுண்டரில் பலியாகவிருந்த 100 ரவுடிகளைகளையும் கதாநாயகன் எப்படிக் காப்பாற்றினார் என்பதே சுல்தான்.
சென்னையின் பிரபல தாதாவான சேதுபதியின் (நெப்போலியன்) மகன்தான் சுல்தான் (கார்த்தி). ரோபாட்டிக் தொழிலதிபர் ஆக ஆசைப்படும் சுல்தானை அப்பாவின் மரணம் சுழற்றியடிக்கிறது. சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்கும் அதிகாரி ரவுடியிசத்தை ஒழித்துக்கட்ட என்கவுண்டரை கையில் எடுக்கிறார். இதனால், தனது அப்பாவிடம் வேலை செய்து வந்த 100 ரவுடிகளையும் காப்பாற்றுவதற்காக, அவர்களை அழைத்துக்கொண்டு கனிவளனூர் எனும் கிராமத்துக்கு வந்து சேர்கிறார். கார்ப்பரேட்டுக்களின் கனிமவள வேட்டைக்காக காத்திருக்கும் அந்த ஊரை சுல்தான் எப்படிக் காப்பாற்றினார் என்பது கதை.
தமிழகம் எப்படி கனிமவள வேட்டைக்காடாக மாறி நிற்கிறது என்பதை ஒரு ஹீரோயிச வன்முறைக் கதைக்குள் அழகாக பொருத்தித் தந்திருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன். காதல் ரசம், நகைச்சுவை பொறியல் என்று கமர்ஷியல் வெரைட்டி காட்டியிருந்தாலும் திரைக்கதை நெடுகிலும் நெஞ்சை உறைய வைக்கும் வன்முறைக் காட்சிகளால் அதிர வைக்கிறது படம். தயவு செய்து 16 வயதுக்கு உட்பட பிள்ளைகள் இந்தப் படத்தை பார்க்காமல் பார்த்துகொள்வது நல்லது.
வன்முறையும் ரத்தமும் தெறிக்கும் இந்தக் கதையில் பாராட்ட வேண்டிய முதல் அம்சம், திரைக்கதையில் கதாபாத்திரங்களுக்கு இடையில் உணர்ச்சிக் குவியலாக இல்லாமல் அளவான இயல்பான, தடம் புரளாத உணர்ச்சி நிலையில் அடக்கி வாசித்திருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
அதில், 100 ரவுடிகளுக்கு சமைத்துப்போடும் சேதுபதியின் மனைவி அபிராமி, வயிற்றில் வளரும் தனது மகன் எக்காரணம் கொண்டும் ரவுடியாக ஆகிவிடக் கூடாது என்று கோருவது, இறப்பதற்கு முன், அபிராமியின் மெட்டியை மகனின் கையில் கொடுத்து உன் மனசுக்குப் பிடிச்ச பெண்ணுக்கு இதைப் போடு என சேதுபதி சொல்வது, எதிரிகளின் தாக்குதலில் சேதுபதியின் ரவுடிகளில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனை கிடக்கும்போது அவர்களில் ஒருவனுடைய தாய் வந்து, “ உன்னோட அப்பா.. உன் கையில் கத்தியக் கொடுப்பாரா.. உன்னை மட்டும் வெளியூருக்கு அனுப்பி படிக்க வச்சாரே?” என்று கேட்கும் இடம், சுல்தான் பிறந்தபோது அவனை வீரனாக வளர்க்கும் பொறுப்பை எடுத்துகொண்ட அன்வர், அவனுக்கு சுல்தான் என்று பெயர் சூட்டுவதுடன், ஒரு தாய் மாமனாகவே வாழ்ந்து மடிவது என படம் நெடுகிலும் இந்த ‘உணர்ச்சி’ பேலன்ஸ் அழகாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஆனால் படத்தில் பெருங்குறையாக இருப்பது, இது பாதி தமிழ்ப் படம், மீதி தெலுங்கு மிகை மசாலா படம் என்ற கலவையில் திரைக்கதை ஆக்ஷன் காட்சிகளை லாஜிக் பற்றிய துளி கவலையும் இல்லாமல் திணித்திருப்பது. மிகை மசாலா தெலுங்குப் படங்களில் மிகை வில்லன், மிகை வன்முறை, மிகை காட்சியமைப்பு என லாஜிக் கிலோ என்ன விலை என்று கேட்கும் விதமாக கடந்த 40 ஆண்டுகளாக சித்தரித்து வருகிறார்கள். 100 கிலோ மீட்டரில் வரும் ரயிலையே தடுத்து நிறுத்தும் ராமகிருஷ்ணா போன்ற கதாநாயர்கள் எல்லாம் அங்கே உண்டு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இப்படி மலினமாக தெலுங்கு மற்றும் கன்னட வெகுஜன ரசனையை தமிழர்கள் மற்றும் மலையாளிகள் மீது திணிப்பது பெரும் வன்முறை.
கார்த்தி மொத்தக் கதையும் தனது தோள்களில் தாங்கி நடித்திருக்கிறார். நாயகி ராஷ்மிகா மந்தனாவுக்கு அழகான கதாபாத்திரம் என்றாலும் திரைக்கதையில் பெரிதாக வேலை இல்லை. மூன்றாம் இடத்தில் யோகி பாபு, லால் ஆகியோர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள். பார்த்த வட இந்திய வில்லன்களின் வார்ப்பில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. சிறிய கதாபாத்திரங்களில் வந்திருந்தாலும் அபிராமி, நெப்போலியன் இரண்டு பேருமே நிறைவு.
படத்தின் மிகப்பெரிய பலகீணம் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை. ரசிகர்களின் காதுகளைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அடித்து கிழி கிழி என்று கிழித்து மண்டை காய வைத்திருக்கிறார்.
கனிவளனூர் கிராமத்தில் 80 சதவீதக் கதை நடப்பதால் அதை பிரம்மாண்டமாக ஒளிப்பதிவு செய்து அசத்தியிருக்கிறார் சத்யன் சூரியன். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி முழுவதும் இரவில் நடப்பதால் அதை சிறப்பான ஒளியூட்டல் மூலம் காட்டி அசத்தியிருக்கிறார்.
கதைக் களம் புதிதாக இருக்கும் அளவுக்கு காட்சிகள் எதுவும் புதிதுபோல் இல்லாமல் இருப்பது படத்துக்கு பெரிய பலவீனம் என்றாலும் கார்த்தி, ராஷ்மிகா, லால், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவுக்காகக் காணலாம்.
- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு