கும்கி யானையை வைத்து எந்தப் புதுமையும் இல்லாத காதல் கதை ஒன்றை இயக்கியவர் பிரபுசாலமன். அவருடைய இயக்கத்தில் வெளியான ‘லாடம்’ படம் மட்டுமே ஒரிஜினல் திரைக்கதை எனலாம்.
மைனா, கயல், தொடங்கி தற்போது வெளியாகியிருக்கும் ‘காடன்’ வரை அனைத்துமே பல படங்களிலிருந்து, சிறுகதை மற்றும் நாவல்களிலிருந்து அவற்றின் மையக் கருத்தாக்கங்கள், காட்சிகள், சீக்குவென்சுகள் ஆகியவற்றை காப்பியடித்து அதைத் திரைக்கதை என்கிற மசாலா சுண்டலாக மாற்றி, அது செரிமாணம் ஆகாமல் பிரபுசாலமன் வாந்தியெடுத்த படங்கள்தான் இவை. இதற்கு காடனும் தப்பவில்லை.
இந்திய, ஆசிய யானைகளைப் பற்றி இதுவரை 10-க்கும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு ஆவணப் பட இயக்குநர்களால் உருவான ஆவணப்படங்கள் வெளிவந்துள்ளன. யானைகளின் வழித்தடங்களையும் வாழ்விடங்களையும் அழித்தால் வன வளம் அழிந்து மழைவளம் இல்லாதுபோகும் என்ற செய்தியை நேரடியாகச் சொன்னதுடன் கதாபாத்திரங்களை தெலுங்கு சினிமாவுக்கே உரிய சினிமாத்தனத்துடன் சித்தரித்து கிச்சுச் கிச்சு மூட்டியிருக்கிறார் இயக்குநர்.
காட்டில் யானைகளின் பாதுகாவலனாக காட்டில் அவற்றுடன் சுற்றித்திரியும் காடன் என்கிற வீரபாரதி ஆங்கிலத்தில் பேசும் ஒரு ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்துக்கு நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்துக்கு காடு சொந்தமாக இருந்ததாகவும் அதை அவரது தாத்தா அரசாங்கத்துக்குக் கொடுத்ததாகவும் கதை விடுவதுடன், அந்தக் காட்டுக்குள் வாழும் யானைகள், புலிகள் ஆகியவற்றுக்கு அவர் பாதுகாப்பாக விளங்குகிறார்.
இந்நிலையில் ஒரு டவுன்ஷிப் அந்தக் காட்டுக்குள் உருவாக்க மத்திய அமைச்சரின் ரியல் எஸ்டேட் நிறுவனம் முயல்வாதகவும், அதற்காக யானைகளின் வழித்தடம் எப்படி அழிக்கப்படுகிறது என்பதைக் காடன் எப்படித் தடுக்கிறார் என்றும் மிக மோசனமான மாசாலா தெலுங்கு சினிமா பணியில் கதை விட்டிருப்பதுதான் இந்தப் படத்தின் கதை.
அசாமின் காசியாபாத்தில் காட்டை ஒட்டி உருவாக்கப்பட்ட டவுன்ஷிப் ஒன்றை மத்திய பசுமைத் தீர்ப்பாயம் அனுமாதிக்காத நிலையில் அதன் பாதிப்பில் இந்தக் கதையை எழுதியிருக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் ரசிகர்களை முட்டாள் ஆக்கும் காட்சிகள் வழியாக இந்தக் கதையை லாஜிக் சிறிதும் இன்றிச் சித்தரித்துச் செல்கிறார்.
வனத்துக்கும் விலங்குகளுக்குமான உறவைச் சித்தரிப்பதில் கொஞ்சமும் இயல்பு என்பது இல்லை. காடனாக நடித்துள்ள ரானா டக்குபதி இதை தனது நேரடித் தமிழ்படம் என்று சொன்னார். அவரது கதாபாத்திரத்தை வித்தியாசமாக படைக்கிறேன் பேர் வழி என்று வலிப்பு வந்தவரைப்போல தலையை அங்கும் இங்கும் அசைத்து நடிப்பது வித்தியாசமாக இருக்கிறது என்றாலும் கதாநாயகனுக்குரிய புத்திசாலித்தனதுடன் அந்தக் கதாபாத்திரம் படைக்கப்படவில்லை. ஆதேநேரம், தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை முடிந்தவரை சரியாகச் செய்ய முயன்றுள்ளார்.
கும்கி மாறனாக வரும் விஷ்ணு விஷால் குறைந்த காட்சிகளே வந்தாலும் தனது கதாபாத்திரத்தில் ஊன்றி நடிக்காமல் விட்டேத்தியாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் அவ்வளவு முட்டாள்தனமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. கும்கி யானைப் பாகன் இவ்வளவு முட்டாள்தனமாக இருப்பான் என்பதை நம்புவதற்கில்லை. கதாநாயகி சாயலுடன் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் வந்தாலும் அவை கறிவேப்பிலை போல பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்ற துணை நடிகர்களைப் பற்றிச் சொல்வதற்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
80 விழுக்காடு காட்சிகள் வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஓரளவுக்கு தரமான கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ற வகையிலும் ஒளிப்பதிவைத் தந்துள்ளார். ஏ.ஆர்.அசோக்குமார். படத்தில் உருப்படியான இன்னொரு அம்சம் ரெசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பும் ஒலிக்கலவையும்.
படத்தில் நேரடியாகச் செய்தி சொல்வதை மட்டும் உருப்படியாகச் செய்திருக்கும் பிரபு சாலமன், இப்படியொரு படத்தை எடுத்தற்குப் பதிலாக ‘யானைகளின் வாழ்விடங்களை அழிப்பது நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கு சமம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம்.
-4தமிழ்மீடியா விமர்சனக் குழு