பெண்களுக்கான அதி நவீன ஆடைகளை வடிவமைத்து தொழிலதிபர் ஆன ஒரு ஆண் (அசோக் செல்வன்), திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என இரண்டு பெண்களுடன் ஒரு முழு இரவைப் பகிர்ந்துகொள்கிறார்.
இந்த மன்மத லீலையின் முடிவில் மனைவியிடமும் அந்தப் பெண்களின் கணவர்களிடமும் அசோக் செல்வன் மாட்டிக் கொண்டாரா இல்லையா என்று பாட்டி காலத்து வடை சுட்ட கதையை 2010, 2020-ல் என இரண்டு காலகட்டத்தில் நடப்பது போல் காட்டுகிறார்கள்.
முதல் பாதியில் அசோக் செல்வன் சம்யுக்தாவையும் ரியா சுமனையும் பெண்டாள்வதற்காக பேசும் பேச்சும், அதற்கு வெங்கட் பிரபு அள்ளித் தெளிக்கும் இரட்டை அர்த்த வசனங்களும் ‘அடல்ட் நகைச்சுவை’ என்கிற வகையில் அடங்காத ஆபாசமாக இருக்கின்றன. சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் இருவருக்கும் அசோக் செல்வன் கொடுக்கும் இரண்டு ‘லிப் லாக்’ முத்தங்களை நம்பி, இந்தப் படத்துக்கு ‘மன்மத லீலை’ என்று தலைப்பு வைத்து, ஓடிடிக்குக் கூட தகுதியில்லாத படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.
சம்யுக்தாவுடன் அசோக் செல்வன் இருக்கும் போது அவரது கணவர் ஜெயப்பிரகாஷ் வந்துவிட, ‘உனக்கு காதலனா இருக்கலாம்ன்னு நினைச்சேன், இப்படி என்னைக் கள்ளக் காதலன் ஆக்கிட்டியே?’ என்று அசோக் செல்வன் கேட்கும் காட்சியும், ஜெயப்பிரகாஷ் தன் மனைவி சம்யுக்தா பற்றி சொல்லும் போது, ‘இவளை உஷார் பண்ணலாம்னு நினைச்சு வந்திருக்கே, ஆனா, அவ தான் என்னை உஷார் பண்ணியிருக்காடா..’ என்று சொல்லும் காட்சியும் திரையரங்கை கலகலப்பாக்குகிறது.
மாநாடு படத்தில் சிறுபான்மையினர் அரசியல் ஆதாயத்துக்காக பலியாக்கப்படுவதைக் காட்டிய வெங்கட் பிரபு, இதில் கதாநாயகன் செய்யும் படு பாதக செயல்களுக்குப் பிறகும் அவன் சொகுசாக வாழ்வதுபோல் காட்டியிருப்பது அவரது ‘படைப்பு நேர்மை’ மாநாடு படத்துக்கு மட்டும்தான் என்பதைக் காட்டுகிறது. அதேபோல பெண்களின் அங்கங்களை குளோஸ் அப் கோணங்களில் காட்டி, அவர்களை வெறும் உடலாக சித்தரித்து தன்னையும் சராசரி இயக்குனர்களின் பட்டியலில் வைத்துவிடும்படி சொல்கிறார்.
சம்யுக்தா – அசோக் செல்வன், ரியா சுமன் – அசோக் செல்வன் என இரு வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் ஒரே விதமான சம்பவங்கள் இண்டர்கட் உத்தி மூலம் அடுத்தடுத்து காட்டும் முயற்சியில் படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜனின் உழைப்பு தெரிந்தாலும், வீட்டை விட்டு வெளியே வராதா காட்சிகளால் சலிப்பு எரிச்சலாக பிடுங்கிக்கொண்டு வருகிறது.
முந்தைய படத்தின் வெற்றியை வைத்து அடுத்த படத்தை எவ்வளவு குப்பையாகக் கொண்டு போனாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்கிற ஏமாற்று வேலையாகவே இந்தப் படம் எந்த சுவாரசியமும் இல்லாமல் வெறுப்பேற்றுகிறது. உங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்கி விடாதீர்கள்.
-4தமிழ்மீடியா விமர்சனக் குழு