ஹாலிவுட் பாணியில் படத்தின் கதையை, அதன் வெளியீட்டுக்கு முன்னரே டிரைலரில் வெளிப்படையாகக் சொல்லிவிட்ட இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் துணிவைப் பாராட்டியே ஆக வேண்டும்.
படத்தில் பெரிதாக எதிர்பார்த்து வராதீர்கள்; இவ்வளவுதான் விஷயம் என்று ரசிகர்களை படம் பார்க்கும் முன்பே மனதளவில் தயாரித்து அனுப்பியது இதற்காகத்தானா என்று படம் பார்த்து முடித்ததும் இப்போது தோன்றுகிறது.
பாகிஸ்தானின் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்தபடி செயல்படும் தீவிரவாதக் குழு ஒன்றின் தலைவரை அதிரடி ஆபரேஷன் மூலம் கைது செய்து இந்திய அரசாங்கத்தின் கையில் கொடுக்கிறார் இந்தியாவின் ‘ரா’ உளவுப் பிரிவு ஏஜெண்டான விஜய். அந்த ஆபரேஷனில், உயரதிகாரியின் தவறனா தகவலால், எதிர்பாராத விதமாக ஒரு சிறுமி உயிரிழந்துவிட அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விஜய், வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் பூஜாவுடன் மெல்லிய காதல். பூஜா வாங்கித்தரும் செக்யூரிட்டி ஆபீஸர் வேலையில் இணைவதற்காக மால் ஒன்றுக்குச் செல்கிறார். விஜய் கைது செய்து ஒப்படைத்த அதே திவீரவாதக் குழுவின் தலைவரை சிறையில் இருந்து விடுவிக்க, விஜய் வேலைக்குச் செல்லும் ஷாப்பிங் மாலினை ‘ஹைஜாக்’ செய்து, அங்கே ஷாப்பிங் வந்த நூற்றுக்கும் அதிகமான மக்களை பிணையக் கைதிகளாக வைக்கிறார்கள். அந்தத் தீவிரவாதிகள் குழுவை தனிமனித ராணுவமாக இருந்து வேட்டையாடி பிணையக் கைதிகளை விஜய் எப்படி மீட்டார்? இந்த ‘ஹைஜாக்’கில் இந்திய அரசியல்வாதிகளுக்கு என்ன பங்கு இருந்தது? அதை விஜய் எப்படி அணுகினார் என்று கதை செல்கிறது.
எண்பது விழுக்காடு கதை ஷாப்பிங் மாலில்தான் நடக்கிறது. மீதமுள்ள 20 சதவீதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் அதன் வான் வெளியில் விமான சண்டையாகவும் நடக்கிறது. ஷாப்பிங் மாலில் ஒரே இடத்தில் கதை நடந்தாலும் அங்கு நடக்கும் காட்சிகளை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற இயக்குநர் நெல்சனின் முயற்சி நன்றாகவே எடுபட்டிருக்கிறது. ஆனால், தீவிரவாதிகள் சுத்த அம்மாஞ்சிகளாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதுதான் இடிக்கிறது.
மாலுக்குள் தீவிரவாதிகள் வந்து எல்லோரையும் மிரட்டுகிறார்கள். அவர்களை சக் சக் என்று கத்தியால் குத்திக் கொல்கிறார் விஜய். அல்லது ஸ்டைலாகச் சுட்டுத் தள்ளுகிறார். இத்தனை களேபரங்களுக்கு நடுவே பினையக்கைதிகள் அனைவரும் கல்யாண விருந்தில் பிரியாணி சாப்பிட வந்தவர்கள்போல் சம்மணமிட்டு உட்கார்ந்தே இருக்கிறார்கள். மாட்டிகொண்ட மக்கள் அமைதியாக இருப்பதால், தீவிரவாதிகளும் அமைதியாக இருக்கிறார்கள் என்று எடுத்துகொள்ளலாம். ஆனால், தீவிரவாதிகளிடம் விஜய் சரணடைந்தபிறகு விஜய்யுடன் இருக்கும் பூஜா, விடிவி கணேஷ் ஆகியோரைக் கூட அவ்வளவு டீசெண்டாக நடத்தும் அளவுக்கு ‘நல்ல’ தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்.
மாலுக்குள் தன்னையும் தன்னுடன் இருக்கும் செக்யூரிட்டி நிறுவன ஆட்கள், தன்னைப் போட்டுத்தள்ள வந்த இருவர், இவர்களுடன் பூஜாவின் ‘பியான்சி’ ஆகியோரையும் மட்டும் காப்பாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடலாம் என எண்ணும்போது விஜய்க்கு அந்த ‘சைக்கோ’ பிரச்சினை வந்து அது தீவிரவாதிகளை அறுவடை செய்யும் களமாக மாறுவது நன்றாகவே எடுப்பட்டிருக்கிறது. அதேமாதிரி, உள்துறை அமைச்சரின் உள்குத்துக்கு விஜய் கொடுக்கும் கிளைமாக்ஸ் பன்ச்சும் பக்கா!
இன்னொரு பக்கம், விடிவி கணேஷின் காமெடி டெலிவரி அபாரம்! அவரால் விஜய் கேரக்டர் விழுந்து எழும் இடம் நகைச்சுவை வழியாக திரைக்கதையில் அசத்தலான திருப்பதைக் கொண்டுவரமுடியும் என்பதை நெல்சன் தன்னுடைய ‘டாக்டர்’ மற்றும் ‘கோலமாவு கோகிலா’ பாணியில் அட்டகாசமாக செய்து காட்டியிருக்கிறார்.
இவைபோன்ற அம்சங்களையேல்லாம் பாராட்டிக்கொண்டே போகலாம் என்றாலும் கண் கண்ணாடி சில்லாக உடைத்து, அதிலிருந்து ஒரு சில்லை வைத்து நைலான் கயிற்றை கதாநாயகன் அறுக்க முடியுமா என்ற பிரம்மாண்ட கேள்வி எழுகிறது. எல்லையில் பதற்றம் நிறைந்த இரு நாடுகளின் லைன் ஆஃப் கண்ட்ரோலைத் தாண்டி, இந்திய ராணுவத்தின் போர் விமானத்தை ஒரு கால் டாக்ஸிபோல எடுத்துக்கொண்டுபோய் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளின் தலைவனை கையில் மூட்டையாகக் கட்டி தூக்கிக்கொண்டு வரமுடியுமா என்றால் விஜய் படத்தில் இப்படியெல்லாம் லாஜிக் தேடக் கூடாது என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.
இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். ‘காஷ்மீர் பைல்ஸ்’போன்ற ஒரு சார்பு இனவாதப் படங்கள் வேண்டுமானால் வெளிப்படையான அஜண்டாவுடன் காஷ்மீர் முஸ்லீம்களை ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாகச் சித்தரிக்கலாம். அதைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால், விஜய் போன்ற அனைவருக்கும் பொதுவான ஒரு மாஸ் நடிகரும் இதே குட்டையில் விழுந்த மட்டையாகவேண்டுமா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
பீஸ்ட் என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஆக்ஷன் காட்சிகளில் ரணகளமாக இருக்கும் விஜய், மற்ற காட்சிகளில் அமைதியாக அலட்டமால், தனக்கே உரிய நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். விஜயிடம் கொஞ்சம் நரை இருந்தாலும் திரையில் அவர் அழகாகத் தோன்றுவதிலும் அதிரடியாக அழகாக நடனமாடுவதிலும் அவரை மிஞ்ச ஆள் இல்லை என எண்ண வைக்கிறது. குறிப்பாக ‘அரபிக்குத்து’பாடலில் விஜயின் நடன அசைவுகள் நம் கண்களை திரையை விட்டு அகலாமல் பார்க்க வைக்கின்றன.
பூஜாவின் ஸீரோ சைஸ் நடனமும் நன்றாக இருந்தாலும் நடிப்பில் அவ்வளவாக ஈர்க்கத் தவறிவிடுகிறார். உள்துறை அமைச்சரையே கலாய்க்கும் செல்வராகவன் கதாபாத்திரம் கொஞ்சம் ஓவர்தான்! இயக்குநர் நெல்சனின் ஆஸ்தான நடிகர்களான ரெடின் கிங்ஸ்லியும் யோகி பாபுவுக்கும் படத்தில் அவ்வளவாக நகைச்சுவைக்கான இடம் இல்லை என்றாலும் கிடைத்த இடத்தில் விளையாடுகிறார்கள். பூஜாவின் பியான்சியாக வரும் சதிஷ், விஜயும், பூஜாவும், சதிஷ் முன்பு கட்டிப் பிடிக்கும் காட்சியில் ‘கல்யாணத்துக்கு முன்னாடி என்ன லவ் பண்ணலாம். ஆனா கல்யாணம் பண்ண போறவன் முன்னாடி பண்றதுதான் தப்பு’, லிப்டில் செல்லும்போது, ‘இப்போ கூட சொல்லு இவனுங்கள நான் பார்த்துக்குறேன்’ என்று ஹீரோயிசம் செய்வதில் தொடங்கி எலைட் காமெடியில் கலக்கியிருக்கிறார்.
ஆக்ஷன், நகைச்சுவை, செண்டிமெண்ட், காதல் என நெல்சனின் கலவை நன்றாக இருந்தாலும் லாஜிக் பற்றி எதுவும் கேட்கக் கூடாது என்று சொல்லுல் பீஸ்ட்; விஜய் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்! நெல்சன் ரசிகர்களுக்கு ஆஃப் ஆயில்!
- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு