கீதாரிகளின் வாழ்வியலை அற்புதமாக சித்தரித்த படம் இது. தொரட்டி என்பது கீதாரிகள் மரக்கிளைகளிலிருந்து இலைகளைப் பறித்து ஆடுகளுக்குப் போடுவதற்காக வைத்திருக்கும் ஒன்று.
விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருந்த ஷமன் மித்ரு தாமே சொந்தமாகத் தயாரித்து சிறப்பாகவும் நடித்திருந்தார். கதையின் நாயகனாக ஷமனின் நடிப்பு பாராட்டப்பட்டது. அதேபோல் இவருக்கு ஜோடியாக நடித்த சத்யகலா விமர்சர்களால் கொண்டாடப்பட்டார்.
இவர்களைத் தவிர, குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்திருந்தனர். குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத் தொகுப்பு செய்திருந்தார். பாடல்களுக்கு வேத்சங்கரும், பின்னணி இசைக்கு ஜித்தன் ரோஷனும் இணைந்து இசை அமைத்திருந்தார். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பி.மாரிமுத்து.
படத்தின் நாயகன் ஷமன் மித்ரு கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று குரோம்பேட்டை நிலா மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார் , அவருக்கு வயது 43 , சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான அவர் தமிழ், தெலுங்கு , கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தாலும் தன்னை முழுமையாக அடையாளப்படுத்தி கொள்ள தொரட்டி படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றவர் அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கிய நேரத்தில் மரணமடைந்தது வருத்தத்திற்குரியது அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் , மோக்ஷா என்று 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சொந்த ஊர் காரைக்குடி, சிங்கம்புணரி.