free website hit counter

ஒன்றிய நிதி அமைச்சருக்கு சத்யஜோதி தியாகராஜன் அவசரக் கடிதம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களுக்கு,

கொரோனா பெருந்தொற்றினால் மார்ச் 2020ல் அறிவிக்கப்பட்ட முதல் பொதுமுடக்கத்திலிருந்து இந்திய திரையுலகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதுமுதல் அக்டோபர் 2020 வரையிலும், அதற்குபின் 50% இருக்கைகளுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி வழங்கப்பட்டபின்னும், மக்கள் திரையரங்குகளுக்கு வர விருப்பம் காட்டவில்லை.

இந்நிலையில் ஜனவரி 2021 முதல் திரைத்துறை மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருந்த சூழ்நிலையில், ஏப்ரல் 2021 முதல் மாநில அரசு விதித்த இரண்டாம் பொதுமுடக்கத்தால் திரைத்துறை மிகவும் பாதிப்படைந்திருக்கிறது. இன்றைய சூழலில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகமுடியாமலும் தங்கள் மூலதனத்தை மீட்க முடியாமலும் கிடப்பில் உள்ளன. தமிழ் திரைத்துறையில் மட்டும் 1000 கோடிக்கு மிகையான மூலதனம் 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் வாயிலாக முடங்கிக்கிடக்கின்றது. இச்சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள் கடன் வழங்குநர்களிடமும் வங்கிகளிடமும் பெற்ற கடனுக்குண்டான வட்டியை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திரைத்துறை மிகவும் சொற்பமான அளவான 1௦% லாபத்தை மட்டுமே பெறுகிறது. மீதமுள்ள 9௦% திரைப்படங்கள் தோல்வியை சந்திக்கும் அவலநிலையை தாங்கள் நன்கு அறிவீர்கள். திரைத்துறையின் மீது உள்ள பற்று காரணமாக ஆண்டுதோறும் 7௦% புதிய தயாரிப்பாளர்கள் திரைத்துறையை நோக்கி அணிவகுக்கிறார்கள். எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என அவர்கள் நினைத்தாலும் 9௦% தோல்வி அடையக்கூடிய சாத்தியக்கூறுகள் பல்வேறு காரணங்களால் ஆண்டாண்டுகளாக அப்படியேதான் உள்ளது.

இப்படியான கடினமான சூழ்நிலையிலும் முடிங்கிக்கிடக்கும் மூலதனத்தை மீட்டெடுத்துப்பதில் ஐயப்பாடுகள் நிலவிக்கொண்டிருக்கும் வேளையிலும், 194-J பிரிவின் கீழ் ஆதாய உரிமையில் (Royalty) 10% வருமானவரி பிடித்தம் (TDS) செய்ய வழிவகுக்கும் ஆணையானது, தத்தளித்துக்கொண்டிருக்கும் திரைத்துறையின் மேல் பேரிடியாக விழுந்திருக்கிறது. மார்ச் 2020 வரை ஆதாய உரிமையில் வருமானவரி பிடித்தம் 2% ஆக இருந்த சூழலில் கொரோனா பெருந்தொற்றினால் அது 1.5% ஆக குறைக்கப்பட்டது. இன்னிலையில் 2021-22 நிதியாண்டில் அது 10% ஆக மாற்றப்பட்டிருப்பது. நஷ்டத்திலிருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது.
மற்ற தொழில்துறைகளை போல் அல்லாமல் திரைத்துறையில் உள்ள விநியோகிஸ்தர்கள் முதல்முறை தொழில்முனைவோர் ஆவர். அவர்கள் விநியோகம் செய்த திரைப்படம் வெற்றியடைந்தால் மட்டுமே அவர்கள் தொழிலில் தொடர்வாரேயன்றி இல்லையேல் திரைப்படம் விநியோகம் செய்வதை கைவிட்டுவிடுவதுடன் வருமான வரி பிடித்தம் செய்த சான்றிதழையும் தயாரிப்பாளர்களிடம் வழங்கமாட்டார்கள். இது தயாரிப்பாளர்களுக்கு பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும்.

மேலும் நஷ்டத்தை சந்திக்கும்பட்சத்தில் 10% வருமான வரி பிடித்ததை உரிமைகோரும் முறை 70% முதல்முறை தயாரிப்பாளர்களுக்கு பொருந்தாது. அத்தகைய தயாரிப்பாளர்கள் தோல்வியை சந்தித்தால் திரைத்துறையை விட்டு விலகும் சாத்தியக்கூறுகளே அதிகமென்பதால் வருமான வரி பிடித்ததை உரிமைகோரி எந்த பயனும் இல்லை.

தொழில்த்துறை சம்மேளனமான FICCI மற்றும் பிரபல நிறுவனமான EY மார்ச் 27, 2021 வெளியிட்ட கூட்டறிக்கையில், படப்பிடிப்பு சார்ந்த பொழுதுபோக்குத்துறையின் வருவாய் 2019 ஆம் ஆண்டு 11,900 கோடியில் இருந்து 40% குறைந்து, 2020 ஆம் ஆண்டு 7200 கோடியாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 2021ல் பெருந்தொற்று காரணமாக அது மேலும் 25% குறைந்து 5000 கோடியாக குறையும். இதனால் கடந்த 2 ஆண்டுகளில் திரைத்துறை 60% வீழ்ச்சியை சந்திக்கும். இத்தகைய சூழ்நிலையில் தங்களின் மேலான ஆதரவு தேவைப்படுவதால் 10% வருமானவரி பிடித்தம் செய்யும் முறை போன்ற வரி மாற்றங்கள் திரைத்துறைக்கும் திரையரங்குகளுக்கும் நடத்தப்படும் மூடுவிழா போன்றதாகிவிடும். மேலும் திரைத்துறையை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஆதாய உரிமையில் 10% வருமானவரி பிடித்தம் செய்யும் முடிவை கைவிட்டு திரையுலகம் மீண்டெழும் வரை பழைய முறையான 2% வரி முறையையே தொடர வேண்டும். இந்திய திரைத்துறையின் எதிர்காலமும் வாழ்வாதாரமும் தங்களிடமே இருப்பதால் 10% வருமானவரி பிடித்தம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்து பழைய முறையான 2% வரி முறையையே தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

T.G. THYAGARAJAN
Treasurer - TFAPA
Chairman of CII - Media & Entertainment (South)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula