தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதியின் தோழி டாக்டர் சுபாஷினியாக நடித்திருந்த தமன்னாவை தமிழ் ரசிகர்கள் மறக்கவிரும்பவில்லை. அந்தப் படத்தில் அவ்வளவு எதார்த்தமாக நடித்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
அதன்பிறகு ‘குயின்’ இந்திப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்திருந்தார் விரைவில் அது ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில் தற்போது தமன்னா கதையின் நாயகியாக நடித்துள்ள புதிய தமிழ் க்ரைம் த்ரில்லர் இணையத் தொடர் ஒன்றினை டிஸ்னி + ஹாட்ஸ்டார் மே 20-ஆம் தேதி தனது ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது. ‘நவம்பர் ஸ்டோரி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் கொடூரமான ஒரு கொலையின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிப்படுகின்றனவாம். கிட்டத்திட்ட தமன்னா முதல் முறையாக வில்லியாக நடித்திருக்கிறார் என்கிறார்கள்.
ராம் சுப்பிரமணியன் இயக்கியிருக்கும் இந்தத் தொடரின் கதைச் சுருக்கும் இதுதான்: அனுராதா (தமன்னா) ஒரு இளம் அறம் சார் இணையவழி ஹேக்கர், அவரது அப்பா கணேசன் (ஜி.எம்.குமார்) கட்டிய வீட்டை விற்கிறார். ஆனால், வீட்டை ஒப்படைக்க கால அவகாசம் கேட்கிறார். வீட்டை விற்றால்தான் அப்பாவின் அல்சைமர் நோய் சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியும் என்கிற நிலை. ஆனால், ஒரே இரவில், அவர்களின் வாழ்க்கை ஒரு கொலையால் புரட்டிப்போடப்படுகிறது. வெளியே போய்விட்டு விற்ற வீட்டுக்கு வரும் அனுராதா, தன் வீட்டில் ஒரு பெண் இறந்து கிடக்க, அந்த உடலுக்கு அருகில் தனது அப்பா கணேசனைக் காண்கிறார்.
அவர் ஒரு க்ரைம் நாவல் எழுத்தாளர், அனைத்து ஆதாரங்களும் கணேசனை குற்றவாளியாகக் காட்டுக்கின்றன. அந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டுபிடிக்க அனுராதா தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொள்ளும்போது அதிர்ச்சியூட்டும் சங்கிலித் தொடர் திருப்பங்கள் வெளிப்படுகின்றன. கொலையான அந்தப் பெண் யார், கணேசன் இந்த கொடூரமான குற்றத்தை செய்திருப்பாரா? அப்பா கொலை செய்திருக்கமுடியாது என்பதை, மகள் அனுராதாவால் நிரூபிக்க முடிந்ததா என்பதுதான் கதை. மொத்த 7 எபிசோட்கள்.