வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்துள்ள வலிமை படம் வெளியாகயிருக்கிறது. மழை, வெள்ளத்தில் தமிழ்நாடு மிதந்தாலும் வலிமை படத்துக்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெறித்தமான அன்பை அவர் மீது பொழியும் அவரது ரசிகர்கள், அஜீத்தை அனைவரும் செல்லமாக ‘தல’ என்றுதான் அழைப்பார்கள். இந்த ‘தல’ என்ற சொல்லை வைத்து “எவன்டா தல..?” என்று நடிகர் விஜய், தன்னுடைய ஒரு படத்தில் கேள்வியெழுப்புவதைப் போல கிண்டல் செய்திருந்தார். இதையடுத்து இன்னும் தீவிரமாக ‘தல’ என்ற பெயரை ட்ரெண்ட் செய்தனர் அவரது ரசிகர்கள். இன்னொரு பக்கம் இதே ‘தல’என்கிற பட்டத்தை தோனிக்கும் கொடுத்து அவரையும் அழைத்து வந்தனர் சி.எஸ்.கே. அணியின் ரசிகர்கள்.
இதனால் இந்த ‘தல’ என்ற பெயருக்குப் பொருத்தமானவர் யார் என்கிற போட்டி எழுந்தது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக தோனி ரசிகர்களுக்கும், அஜீத்தின் ரசிகர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தன. இந்த அரட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் அஜீத் ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இனிமேல் தன்னைக் குறிப்பிடும்போது வெறுமனே நடிகர் அஜீத்குமார் அல்லது அஜீத் என்று குறிப்பிட்டாலே போதும். வேறு எந்தப் பட்டப் பெயரையும் பயன்படுத்த வேண்டாம்” என்று தன்னுடைய ரசிகர்களையும் ஊடகத்தினரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
“ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும்போதோ, அல்லது என்னைப் பற்றி குறிப்பிட்டுப் பேசும்போதோ என் இயற் பெயரான அஜித்குமார், மற்றும் அஜித் என்றோ எல்லது ஏ.கே. என்றோ குறிப்பிட்டால் போதுமானது.‘தல’என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக ‘தல’ என்ற அடைமொழியை அவர் தோனிக்கு விட்டுக் கொடுத்துவிட்டார் என்று புரிந்துகொள்ளலாம்.