"தவெக தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன்" என்று, தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். அதன் தொடர்ச்சியாக நடிகர் சந்தானத்துடன் பல இடங்களில் இணைந்து நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று நடித்தார்.
இந்த நிலையில், சென்னை வடபழனியில் திரைப்பட பூஜை ஒன்றில் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:
ஜோசப் விஜய் அவர்களே, நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். உங்களை உடன்பிறவாத தம்பி மாதிரிதான் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது நீங்கள் மிகவும் அமைதியாக இருந்தீர்கள். இப்போது அரசியல் மேடையில் பயங்கரமாக டயலாக் பேசுகிறீர்கள்.
கட்சி தொடங்கி இருக்கும் விஜய், முதலில் களத்துக்கு வர வேண்டும். களத்திற்கு வாருங்கள், அப்போதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். பாரம்பரிய கட்சியான திமுகவை கண்டபடி விமர்சனம் செய்யக்கூடாது. நான் முதலமைச்சர் ஸ்டாலின் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறவன்.
அருமைத்தம்பி விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு. இதன் நான் சொல்வதால் எனக்கு விஜயின் தொண்டர்கள் மூலம் ஆபத்து நேரிடலாம். இவ்வாறு, பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.
																						
     
     
    