சென்னை: முன்னணி தெலுங்கு மொழி நடிகரான அல்லு அர்ஜுன், புராண கால திரைப்படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.
இயக்குநர் சுகுமாறின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றன. இந்த படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மொத்தம், ரூ. 2200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளன.
இதை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில், பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து ஒரு படத்தில் அல்லு அர்ஜுனா நடித்து வருகிறார். அதேபோல், த்ரி விக்ரம் சீனிவாசனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்த படங்கள் என்று தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அல்லு அர்ஜுனா, இதில் ஒரு மாறுபட்ட புராண கால கதையில் நடிக்கிறார்.
இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது முற்றிலும் மகாபாரத இதிகாசத்தை தழுவிய புராணக் கதையாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கவுள்ளது.