பாலிவுட்டின் சிறந்த நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் நவாசுதின் சித்திக். ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘லன்ச் பாக்ஸ்’ உள்ளிட்ட பல இந்திப் படங்களின் வழியாக தென்னிந்திய ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘பேட்ட’ தமிழ்ப் படத்தில் நடித்தவர். ஆனால், இவர் தற்போது ‘செலக்டிவ் அம்னிசியா’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது.
காரணம் தற்போது, நவாசுதின் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோபான்ட்டி 2’ என்ற இந்திப் படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படத்துக்காக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் ‘புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்கள் சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன், இந்திப் படங்களின் வசூலையும் முறியடித்துள்ளனவே? என்ற கேள்வியை பேட்டியாளர் அவரிடம் கேட்டார். இதற்கு அவர் பதிலளித்தபோது, “பொதுவாக தென்னிந்திய திரைப்படங்களை இதுவரை நான் பார்த்ததே கிடையாது. அதனால் தென்னிந்திய திரையுலகம் குறித்த கேள்விக்கு நான் பதில் கூறுவது சரியாக இருக்காது. ஆனால், ஒரு விஷயத்தை என்னால் தெளிவாக கூற முடியும். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் சிறிது காலத்துக்கு மக்கள் அதுகுறித்தே பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதைகளின் தாக்கத்தில் பல படங்கள் வெளியாகும். இதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. பல்வேறு காரணங்களுக்காக பலதரப்பட்ட மக்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒரு திரைப்படம் இருப்பதே உண்மையான வெற்றி என நான் நினைக்கிறேன்” என்று பேட்ட படத்தில் நடித்ததை மறந்துவிட்டு நவாசுதின் சித்திக் பதில் கூறியுள்ளார்.