தளபதி விஜய் கடந்த 2012-ல் இங்கிலாந்தில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை மகிழுந்தினை இறக்குமதி செய்தார்.
அதைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது, வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என அவருக்குக் கூறப்பட்டது. இதையடுத்து, காரை இறக்குமதி செய்தபோது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டு, விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வழக்கை ஏற்காமல் தள்ளுபடி செய்தார். மேலும் ‘நடிகர்கள் முறையாக வரி செலுத்த வேண்டும், அவர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது’ எனக் கண்டனக் கருத்து தெரிவித்த நீதிபதி, விஜய்க்கு இந்த வழக்கைப் போட்டதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
இதில் கொதித்துப்போன விஜய், அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் தீர்ப்பில் உள்ள விமர்சனங்களை நீக்கக் கோரியும் மேல் முறையீடு செய்தார். உடனடியாக அதை விசாரித்த நீதிமன்றம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில், முடித்து வைக்கப்படாமல் இழுவையாக நீடித்துவந்த இந்த வழக்கு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது ஷபீக் அமர்வில் அக்டோபர் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தனி நீதிபதியின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தை நீக்கவும், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும், ஒரு லட்சம் அபராதம் செலுத்தத் தடை கோரியும், நுழைவு வரி செலுத்த அனுமதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், நிலுவை வரித்தொகையான 32 லட்சத்து 30 ஆயிரத்தை ஆகஸ்ட் 7-ஆம் தேதி செலுத்தியதாகவும் அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும், எனவே நடிகர் விஜய்க்கு எதிரான நீதிமன்ற கருத்துகளைத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும் அவர் தன்னுடைய வாதத்தில்: “ திரைத் துறை என்பது லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், வரி ஏய்ப்பு எண்ணம் ஏதுமில்லை என்றும், மற்றவர்களைப் போல தானும் வழக்குத் தொடர்ந்ததாக, விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. தன்னை தேச விரோதியாகக் கூறுவது தவறு என்றும், நீதிபதியின் கருத்துகள் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. தவிர, நீதிபதிகள் கடும் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், சில வழக்குகளில் நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துபவரை ஆய்வு செய்யலாம் என்றும், அவர்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கலாம் என்றும், ஆனால், இந்த வழக்கில் தேவையில்லை என்றும் வாதிடப்பட்டது. வரி கேட்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றால், அதை எதிர்த்து வழக்குத் தொடரலாம்” என்றும் கூறினார்.
வாதத்தைக் கேட்ட நீதிபதிகள்: “ கருத்துகளை நீக்கக்கோரி சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் ஏன் கோரிக்கை வைக்கக்கூடாது?” எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த விஜய்யுடைய வழக்கறிஞர், இந்த வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் இதேபோன்று நடிகர்கள் எனப் பொதுப்படையாகக் கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும், இந்தக் கருத்துகள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதுடன், குற்றவாளி போலக் காட்டியுள்ளதாகவும் வேதனை” தெரிவித்தார். இதன்பிறகும் இந்த வழக்கில் முடிவு எட்டப்படாமல். தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கைத் தள்ளிவைத்தனர்.