அழுத்தமான கதை, நேர்த்தியான இயக்கம் என்று கவனத்தை ஈர்க்கும் இயக்குநர்களில் ஒருவர் வசந்தபாலன்.
இவரது கடந்த 2014-ல் வெளியான காவியத் தலைவன் படுதோல்வி அடைந்தது. அதன்பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டுவந்தார். கோரானா பெருந்தொற்றாலும் பாதிக்கப்பட்டு மீண்டார். இதற்கிடையை தன்னை ‘ஆல்பம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதை மனதில் வைத்து, வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதுடன் அந்தப் படத்துக்கு பணம் வாங்காமல் இசையமைத்து தரவும் முன்வந்தார் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவரது இசை மற்றும் நடிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் 'ஜெயில்'. திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தைப் பார்த்து வியந்த பிரபல தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
ஜெயில் படத்தில் ‘தேன்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், 'பசங்க' பாண்டி, நந்தன் ராம் (இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் புதல்வன்), ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் ஏராளமான நவீன நாடக நடிகர்களும், புதுமுகங்களும் நடித்துள்ளனர். படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ரேமண்ட் டெரிக் கிரஸ்ட்டா பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சிகளை அமைக்கும் பணியை தேசிய விருது பெற்ற அன்பறிவ் ஏற்றுள்ளனர். இப்படத்திற்காக நடிகர் தனுஷ் அவர்கள் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் யூடியூப்பில் வெளியாகி இரண்டு கோடி பார்வையாளர்களை ஈர்த்து பெரும் வெற்றியடைந்துள்ளது.