இவரது கதாபாத்திரங்கள் மட்டும் எப்படி இத்தனை இயல்பாக வெளிப்படுகின்றன
என்று பேச வைத்துவிடும் இயக்குநர் ராதாமோகன், காதல், நகைச்சுவை, உறவுகளுக்கு இடையிலான அணுகுமுறை என இவரது குடும்பக் காதல் படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு எப்போதுமே கல்யாண விருந்துதான். இதுவரை திரையரங்குகளுக்காக மட்டுமே படங்களை இயக்கி வந்த ராதாமோகன் முதல் முறையாக ஓடிடி தளத்துக்காக ஒரு முழு நீளத் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். வைபவ், வாணிபோஜன் ஜோடியாக நடிக்க, இவர்களுடன் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
‘மலேஷியா டு அம்னீஷியா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இத்தொடர், ஜீ5 ஒரிஜினல் திரைப்படமாக ஓடிடியில் வரும் மே 28 அன்று ரிலீஸ் ஆகிறது. மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி பின்னணி இசை வழங்கியிருக்கிறார். படம் பற்றில் இயக்குனர் ராதாமோகன் கூறுகையில், “ ஓடிடியில் இது எனது முதல் படம். ஒரு குடும்பத் தலைவனுக்கு ஏற்படும் திடீர் சிக்கல்களை அவர் நாடகமாடி சமாளிக்க முயல்கிறார். ஆனால், அதை அவரைச் சுற்றியிருப்பவர்கள் நம்பினார்களா, இல்லையா, நிஜ வாழ்க்கையில் ஒருவன் சக உறவுகளிடம் நடிக்க முடியுமா என்பதை அடிப்படையாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறேன். கதாபாத்திரங்களின் தன்மையை புரிந்து அனைவரும் அற்புதமாக நடிக்கிறார்கள். வைபவ் - வாணிபோஜன் ஜோடி கலக்கியிருக்கிறது” என்கிறார்.