கோவிட் பெரும் தொற்று வைரஸின் பிற திரிபுகளை விட ஒமைக்ரோன் மிகத் தீவிரமானதாகத் தெரியவில்லை என்றும், ஆனால் இதை உறுதிப் படுத்த இன்னும் தீவிர ஆய்வுகள் தேவைப் படுவதாகவும் உலக சுகாதாரத் தாபனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் AFP ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளனர்.
கோவிட் இன் புதிய திரிபான ஒமைக்ரோன் உலக நாடுகளில் பரவுவது இனம் கண்ட பின், அதன் தீவிரத் தன்மை தொடர்பான அச்சம் காரணமாக உலக நாடுகள் எல்லை கட்டுப்பாடுகளையும், லாக்டவுன் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளையும் மீண்டும் அமுல் படுத்துவதில் முனைப்புக் காட்டின. இதில் சில நடவடிக்கைகள் குறிப்பிட்ட சில நாடுகளின் பொருளாதாரத்தை மீண்டும் பாதிக்கக் கூடியதாகவும் அமைந்திருந்தது.
ஆனால் தற்போது ஒமைக்ரோன் பரவுகை தொடர்பான பூர்வாங்கத் தரவுகள் இது மிகத் தீவிரமானது என்று காட்டவில்லை என்று WHO இன் அவசர சேவை இயக்குனர் மைக்கேல் ரியான் ஒரு ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒமைக்ரோன் திரிபு தற்போது பாவனையில் இருக்கும் தடுப்பு மருந்துகளின் செயற்திறனை முழுதும் பாதிப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் எனினும் ஒமைக்ரோனுக்கு எதிராக குறித்த தடுப்பு மருந்துகள் வீரியம் குறைவாக செயற்பட வாய்ப்புள்ளது என்றும் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட மைக்கேல் ரியானுக்கு ஒத்த அதே கருத்தை அமெரிக்காவின் மூத்த விஞ்ஞானி அந்தோனி ஃபௌசியும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஆனால் முந்தைய திரிபான டெல்டாவை விட ஒமைக்ரோன் மிக வேகமாகப் பரவக் கூடியது என்பது தெளிவான விடயம் என்றும் ஃபௌசி தெரிவித்துள்ளார். 2019 ஆமாண்டு இறுதியில் இருந்து உலகைப் பாதித்து வரும் கோவிட் பெரும் தொற்றுக்கு உலகம் முழுதும் இதுவரை சுமார் 5.2 மில்லியன் மக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.