செவ்வாய்க் கிழமை காலை கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியின் கிடேகா நகரில் அமைந்துள்ள சிறைச் சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்ததாகவும், 60 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனை புருண்டி துணை அதிபர் ப்ராஸ்பர் பஸும்பன்ஸா உறுதிப் படுத்தியுள்ளார்.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னமும் தெரியவில்லை. எனினும் சுமார் 400 பேர் மட்டுமே தங்கும் வசதி கொண்ட இந்த சிறையில் மிக அதிகளவாக அதாவது 1500 இற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப் பட்டிருந்தமையே இத்தனை அதிக உயிரிழப்புக்கள் ஏற்படக் காரணம் என புருண்டி ஊடகங்கள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
ஜேர்மனியின் பிரதமராக (சேஞ்சலராக) 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மேர்கெல் இன்று புதன்கிழமை ஓய்வு பெறுகின்றார். 2005 ஆமாண்டு பதவியேற்ற இவர் ஜேர்மனியின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியதில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார். தனது ஆட்சிக் காலத்தில் 4 அமெரிக்க அதிபர்கள், 4 பிரெஞ்சு அதிபர்கள், 5 இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் 8 இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார்.
ஏஞ்சலா மேர்கெலின் அரசியல் வாரிசான ஓலஃப் சோல்ஸ் இன்று புதன்கிழமை பதவியேற்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.