தற்போது ஏற்பட்டிருக்கும் கோவிட் பெரும் தொற்றில் இருந்து சர்வதேச சமூகம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இதை விட அபாயகரமான கட்டுப் படுத்த முடியாத வைரஸ்களும் இனி வரும் காலங்களில் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் உலக சுகாதாரத் தாபனம் எச்சரித்துள்ளது.
ஜி20 மாநாட்டில் சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகளின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இக்கருத்தை உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். நம்மால் கட்டுப் படுத்த இயலாத இன்னொரு வைரஸ் கிருமி வெளிப்படுவது என்பது உயிரியலில் தவிர்க்க இயலாத ஒன்று என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட ஒன்று என்று கூறிய அதனோம், இதனை எதிர்கொள்ளும் விதத்தில் வலுப்படுத்தப் பட்ட, அதிகாரமளிக்கப் பட்ட நிலையான நிதி அளிக்கப் பட்ட உலக சுகாதார அமைப்பும் அவசியம் என்றும் தெரிவித்தார்.
அப்போது தான் கோவிட் 19 போன்ற புதிய வகை அபாயகரமான வைரஸ் தொற்றுக்களைக் கட்டுப் படுத்த விரைவான எதிர் வினையை ஆற்றவும், சிறந்த நிர்வாகத்தை அமைக்கவும் முடியும் என்றும் அதனோம் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை அமெரிக்காவில் கோவிட்-19 இன் புதிய வகை திரிபுகளைத் திறமாக எதிர்கொள்ள அறிமுகப் படுத்தப் பட்ட பூஸ்டர் எனப்படும் 3 ஆவது தடுப்பூசியை துணை ஜனாதிபதியான 57 வயதாகும் கமலா ஹாரிஸ் செலுத்திக் கொண்டுள்ளார்.
'அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 90% சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இறந்தவர்கள் என்றும், நீங்கள் தகுதியுடையவராக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள ஊக்குவிக்கின்றேன்.' என்றும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.