ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார்.
ஈராக் நாட்டின் உளவுத்துறை தலைவராக பதவி வகித்துவந்த முஸ்தபா அல் கதிமி கடந்த ஆண்டு மே மாதம் ஈராக் நாட்டின் பிரதமராக பதவிக்கு வந்தார். ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் அவர் அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் என்று கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி ஈரான் ஆதரவு அரசியல் குழுக்களின் ஆதரவாளர்களால் பிரதமர் வீடு அமைந்துள்ள பிரதேசங்களில் அமைதியின்மையில் ஈடுபட்டுவந்தனர்.
இதற்கிடையில் நேற்று பிரதமர் முஸ்தபா அல் கதிமியின் வீட்டை குறி வைத்து வெடிபொருட்களை ஏந்திய டிரோன்களை கொண்டும், ராக்கெட்டை கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பிரதமர் முஸ்தபா அல் கதிமி காயமின்றி உயிர் தப்பிய நிலையில் பிரதமரின் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
டைக்ரிஸ் ஆற்றின் குடியரசு பாலம் அருகே இருந்து ஏவப்பட்ட தாக்குதலில் மூன்று ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு கூறாத நிலையில் நாங்கள் எங்கள் புலனாய்வு அறிக்கைகளை சரிபார்த்து, ஆரம்ப விசாரணை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம் என அதிகாரிகள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.