அமெரிக்காவின் கெண்டக்கி, இல்லினாய்ஸ், உள்ளிட்ட 5 மாகாணங்களில் சனிக்கிழமை நள்ளிரவு தாக்கிய மிக மோசமான டோர்னிடோ எனும் சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பல நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுவதாக பேரிடர் முகாமை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஒரு பெரும் டோர்னிடோ கூட்டுப் புயல்களாக இந்த சூறாவளி பதிவாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் மோசமாகப் பாதிக்கப் பட்ட சில மாநிலங்களில் அவசர நிலையும் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்காவில் 2011 ஆமாண்டு தாக்கிய மோசமான டோர்னிடோக்களில் அதிகபட்சமாக 800 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை மதியம் கிழக்கு ஜப்பானை 5 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கம் டோக்கியோவுக்கு வடகிழக்கே ஜப்பானின் இபராக்கி அணு உலை அருகே தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப் படவில்லை. இந்த நிலநடுக்கம் நிலத்துக்கு கீழ் 31 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப் படுகின்றது. இதன் போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.