கொரோனா தொற்று காலத்திற்கு பழகிப்போன உலக மக்கள் தங்களது விடுமுறை பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்களுக்காக கோவிட் கால பயண கட்டுப்பாடுகள் குறித்தும் புதிய பயண விதிமுறைகளையும் குறிப்பிட்ட சில ஐரோப்பா நாடுகளும் அமெரிக்காவும் அறிவித்துள்ளன. அதன்படி
அக்டோபர் 4 முதல், சிவப்பு பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து ஸ்காட்லாந்து நாட்டிற்கு வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தால் இனி கொரோனா பரிசோதனை எடுக்கதேவையில்லை என தெரிவித்துள்ளது.
அதேபோல் அக்டோபர் 4 முதல், இங்கிலாந்து திரும்பும் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தங்கள் வீடுகளை நாட முன்பு PCR சோதனை எடுக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக மலிவான மற்றும் எளிமையான சோதனையை மேற்கொள்ளலாம்.
முழுமையாக தடுப்பூசி போடப்படாத நபர்கள், அவர்கள் திரும்பிய பின் இரண்டாம் நாளும் மற்றும் எட்டாம் நாளிலும் மற்றும் புறப்படுவதற்கு முன்னும் PCR சோதனை மேற்கொள்ளவேண்டும். மேலும் அவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
முழுமையான தடுப்பூசி என்பது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே அக்டோபர் 4 முதல் தனிமைபடுத்தலை தவிர்க்கமுடியும். அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பிற பதிப்புகள் - இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் உட்பட - அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக தகுதி பெறுகின்றன.
இங்கிலாந்தின் சிவப்பு வலய பட்டியலில் இருந்துவந்த பங்களாதேஷ், எகிப்து, கென்யா, மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் துருக்கி ஆகியவை இப்போது ஆம்பர்-பட்டியல் (செம்மஞ்சள் நிற) நாடுகளாக மாறியுள்ளன. ஆகவே இப்போது ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு பணம் செலுத்தாமல் இங்கிலாந்துக்குள் நுழையலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நவம்பரில் இருந்து, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இங்கிலாந்து பயணிகள் அமெரிக்கா செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்க குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சிறப்பு விசா பெற்ற வெளிநாட்டவர்கள் மட்டுமே நுழைய முடியும்.