ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 82 300 வெளிநாட்டினர் மீட்கப் பட்டிருப்பதாகவும், எஞ்சியிருப்பவர்களை மீட்கும் பணி ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குப் பின்பும் தொடரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது தலிபான்களின் ஒத்துழைப்பு மற்றும் விமான நிலையங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது போன்ற செயற்பாடுகளைப் பொறுத்தே அமையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடென் தெரிவித்துள்ளார்.
தற்போது காபூலின் விமான நிலையத்தில் மாத்திரமே அமெரிக்கப் படைகள் நிலை கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா தனது காலக்கெடுவான ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் படைகள் முழுவதையும் திரும்பப் பெற்று விட வேண்டும் எனத் தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களுடனான தமது அணுகுமுறையை ஜி7, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ மற்றும் ஐ.நா ஆகியவை ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் பைடென் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காபூல் விமான நிலையம் மிக அதிகளவு தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள இடம் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானின் அணுவாயுதங்களை தலிபான்கள் கைப்பற்றாமல் இருப்பதை அதிபர் ஜோ பைடென் உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காபூல் விமான நிலையம் மீது ISIS-K எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளின் ஆப்கான் பிரிவே தீவிரவாதத் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.