ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான் போராளிகள் தங்களால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்றும் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப் படும் என்றும் அறிவித்துள்ளனர்.
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின் பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதுடன் முடியாதவர்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கியும் உள்ளனர்.
தலிபான்கள் தமது வெற்றிக்குப் பின் முதன் முதலாக நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளனர். இதன் போது அவர்கள் எதிர்காலத்தில் தமது செயற்பாடு, மற்றும் திட்டங்கள் குறித்தும் பேசியிருந்தனர். மேலும், போரின் போது மக்கள் உயிரிழந்தது ஒரு விபத்து தான் என்றும் இதில் உள்நோக்கம் கிடையாது என்றும் தெரிவித்த தலிபான்கள், முன்னால் இராணுவத்தினர், வெளிநாட்டுப் படைக்காக பணியாற்றியவர்கள், அரச அதிகாரிகள் என அனைவரையும் தாம் மன்னித்து விட்டதாகவும், யாரையும் பழி வாங்கவோ வீடுகளில் சோதனையிடவோ மாட்டோம் என்றும் கூட தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தலிபான் அமைப்பின் பகுதி நிறுவனரான அப்துல கனி பரதர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராகப் பதவியேற்க பெரும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மறுபுறம் ஆப்கான் விவகாரத்தில் பல முறை பல்டி அடித்து தலிபான்களுக்கு சார்பாக முடிவுகள் எடுத்தமைக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது குற்றம் சுமத்தியுள்ளார், படுகொலை செய்யப் பட்ட முன்னால் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ.
இன்னொரு முக்கிய தகவல் - ஈரான் அரசு மீண்டும் ஒரு தடவை அணுவாயுதங்கள் தயாரிப்பதற்குப் பயன்படும் யுரேனியம் தனிமத்தை அதிகளவில் தயாரித்து வருவதாக ஐ.நாவின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பான IAEA குற்றம் சாட்டியுள்ளது. மேலும் தமது குழுவினர், ஈரானானது 200 கிராம் யுரேனியத்தை செறிவூட்டியதை கண்டு பிடித்துள்ளதாகவும் IAEA அமைப்பு தெரிவித்துள்ளது.