ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒருமுறை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி விடக் கூடாது என்றும், அங்கு தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்றும், ஆப்கான் மீண்டும் இருண்ட யுகத்துக்குச் சென்று விடக் கூடாது என்றும் திங்கட்கிழமை ஐ.நா பாதுகாப்பு சபையில் நடந்த சந்திப்பில் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், திங்கட்கிழமை ஐ.நா பாதுகாப்பு சபை அவசர அவசரமாகக் கூட்டப் பட்டு, அதில் நிரந்தர உறுப்பு நாடுகள், தற்காலிக உறுப்பு நாடுகள், ஏனைய உறுப்பு நாடுகள் எனப் பல பிரிவுகளும் பங்கு பற்றின. இதில் அந்தோனியோ குட்டெரஸ் தொடக்கம் முதலே தலிபான்கள் ஆக்கிரமிப்பு, மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தே பேசிய போதும் தலிபான்களை ஆதரிக்கும் நாடுகளாக சீனா, ரஷ்யா ஆகியவை திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் அங்கு அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மறுபுறம் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசை மிக இளவயதில் வென்றவருமான பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட மலாலா யூசுஃப்சாய் ஆப்கானில் உள்ள பெண்களது நிலை தனக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆப்கான் தலிபான்கள் வசமானது மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது என்றும், அங்கிருக்கும் பெண்கள், சிறுபான்மை இனத்தவர் மற்றும் மனித உரிமை செயற்பட்டாளர்களது நிலை குறித்து மிகவும் கவலை கொள்வதாகவும், மனிதாபிமான நோக்கில் ஆப்கானின் மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் மலாலா யூசுஃப்சாய் மேலும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் கல்விக்குக் குரல் கொடுத்தமைக்காக இளவயதில் தலிபான்களால் தலையில் சுடப்பட்டு இலண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர் மலாலா யூசுஃப்சாய் என்பவர் குறிப்பிடத்தக்கது.